×

சிஆர்பிஎப் பணிகளில் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுப்பு ஒன்றிய பாஜ அரசை கண்டித்து சென்னையில் 17ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக இளைஞர், மாணவர் அணி அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞர் அணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்.) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிக்கையில், கணினி தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். இந்தி பேசாத மாநில மக்களை புறக்கணித்து, இந்தி மட்டுமே இந்தியா என கட்டமைக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசை திமுக இளைஞர் அணி-மாணவர் அணி வன்மையாக கண்டிக்கிறது.

தேர்வில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாய்ப்பினை மறுக்கப்படுவதை உணர்ந்த திமுக தலைவர்-தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு இதுபற்றி விரிவாக கடிதம் எழுதினார். இப்பணியில் சேருபவர்களின் தகுதியென்பது, நல்ல உடல் வலிமை, அறிவுக்கூர்மை, கட்டுப்பாடான ஒழுக்கம் ஆகியவையே அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் எனும் போது, இந்தி பேசுபவர்களுக்கு மட்டுமான தேர்வாக இதனை கட்டமைக்க முயற்சிக்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம். அதற்கு மாறாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதாகும்.

ஒன்றிய அரசு சர்வாதிகார தன்மையோடு செயல்படுவதை தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி வன்மையாக கண்டிகிறது. பிற மாநில மொழிகளில் கணினி தேர்வினை நடத்துவதற்கு உடனடியாக மறுஅறிவிப்பு வழங்கிட, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தினை வலியுறுத்தி, திமுக இளைஞர் அணி-மாணவர் அணி சார்பில், வரும் 17ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில், சென்னை, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் திமுகவினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

The post சிஆர்பிஎப் பணிகளில் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுப்பு ஒன்றிய பாஜ அரசை கண்டித்து சென்னையில் 17ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக இளைஞர், மாணவர் அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,BJP government ,DMK ,DMK Youth League ,Minister ,Udayanidhi Stalin ,Student League ,CVMP ,Ezhilarasan ,MLA ,Dinakaran ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...