×

44 இடங்களில் திருத்தம் செய்ய சென்சார் கெடு

சென்னை: மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரித்து, கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘A படம்’. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றுடன் சாதி, மத பிரச்னைகளையும் மற்றும் கல்வி, மருத்துவம், விவசாயம் பற்றிய முக்கியத்துவத்தையும் கமர்ஷியலாக சொல்லும் படமாக உருவாகியுள்ள இதை கேஸ்ட்லெஸ் சிவா.கோ இயக்கியுள்ளார். மேகாஸ்ரீ, சுஷ்மிதா சென் ஹீரோயின்களாக நடிக்க, முக்கிய வேடத்தில் சந்திரபோஸ் நடித்துள்ளார். சதீஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜோஸ் பிராங்கிளின் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலரை தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.

படம் குறித்து ராஜகணபதி பேசும்போது, ‘தமிழில் உருவான இப்படத்தில் அம்பேத்கர் மட்டும்தான் தெரிவார். அந்தளவுக்கு தத்ரூபமாக இக்கதையில் பயணித்துள்ளேன். சில காரணங்களால் சென்சாருடன் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. படத்துக்கு நிறைய எதிர்ப்புகளும் இருக்கிறது. இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டால், ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்றார். கேஸ்ட்லெஸ் சிவா.கோ கூறுகையில், ‘இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகளான நடிகை கவுதமி உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர், இதில் இடம்பெற்ற பிரபாகரன், காமராஜர் போட்டோக்களை நீக்க வேண்டும் என்றனர்.

இந்தி ‘காஷ்மீர் பைல்ஸ்’ படத்தில் சிவன் சிலையை எரிக்கின்றனர். அதை அனைவரும் பாராட்டுகின்றனர். ஆனால், சாய்பாபா படம் போட்ட வண்டியை தள்ளிக்கொண்டு பிச்சை எடுக்கும் காட்சியைக் காட்டினால் அவமதிப்பு என்கிறார்கள். விவசாயிகளின் மரணத்துக்கு அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட வேண்டும் என்று சொல்வது என்ன தவறு? ‘ரோஜா’ படத்தில் தேசியக்கொடியை எரிக்கும் காட்சியை வைத்த மணிரத்னத்துக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? 44 இடங்களில் இப்படத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர்’ என்றார்.

The post 44 இடங்களில் திருத்தம் செய்ய சென்சார் கெடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mangadu Amman Movies ,Rajaganapathy ,Ambedkar ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...