×

கோவையில் அண்ணாமலை பெயரை சொல்லி கனிமவள கொள்ளை : 3 பாஜ பிரமுகர்கள் கைது: கடத்தலை தடுத்த மக்களுக்கு மிரட்டல்

கிணத்துக்கடவு: அண்ணாமலை பெயரை சொல்லி கோவையில் கனிமவள கொள்ளையில் ஈடுபட்ட பாஜ பிரமுகர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொள்ளையை தடுக்கும் மக்களை பாஜவினர் மிரட்டுவதாக புகார் தெரிவித்து உள்ளனர். கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய பாஜவினரை தட்டிகேட்ட திமுகவை சேர்ந்த நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் தாக்கப்பட்டார். தாக்கிய பாஜவினரை கைது செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட மக்கள் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து பாஜ தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் கைலாசப்பன், பாஜவை சேர்ந்த காளிமுத்து, மயில் மாணிக்கம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பாஜவினர் கிராவல் மண் கடத்தியதாக கூறப்படும் பொட்டையாண்டிபிரம்பு ஊராட்சியில் உள்ள சாந்தலிங்கம் என்பவரது தோட்டத்திற்கு கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கோவை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் சசிக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தார். அப்போது அனுமதி இல்லாமல் பாஜவினர் கிராவல் மண் கடத்தியது உறுதியானது.

இதையடுத்து அவர் பாஜவினர் எத்தனை அடி ஆழத்திற்கு, எவ்வளவு ஏக்கர் பரப்பளவில் கிராவல் மண் எடுத்துள்ளனர்? என்பதை கண்டறிய கிராம நிர்வாக உதவியாளர்களை கொண்டு அளவீடு செய்தார். அளவீட்டின் அடிப்படையில் பாஜவினர் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கனிமவள கொள்ளைகளை தடுப்பதாக நாடகமாடும் பாஜவினர் இந்த பகுதியில் அண்ணாமலையின் பெயரை சொல்லி அதிகாரிகளை மிரட்டி கிராவல் மண் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்து வருகிறார்கள். பொதுமக்கள் தட்டிக்கேட்டால் மிரட்டுகிறார்கள். அவர்களின் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது. கனிமவளத்துறை அதிகாரி பாஜவினரின் மிரட்டலுக்கு அஞ்சாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

The post கோவையில் அண்ணாமலை பெயரை சொல்லி கனிமவள கொள்ளை : 3 பாஜ பிரமுகர்கள் கைது: கடத்தலை தடுத்த மக்களுக்கு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Annamalai ,BJP ,Kinathukkadavu ,Dinakaran ,
× RELATED ‘பாத்ரூமிற்கு போகும்போதும்,...