×

இந்தியாவின் எதிர்காலத்துக்காக சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மத்தை ஏற்கும் ஜனநாயக சக்திகள் ஒன்றுசேர வேண்டும்: இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: திராவிட கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவை காப்பாற்றும் ஆற்றல் சமூகநீதி – சகோதரத்துவம் – சமதர்மம் ஆகிய மூன்று கருத்தியல்களுக்கு தான் உண்டு. இந்த மூன்று கருத்தியல்களையும் ஏற்றுக்கொள்ளும் ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். திமுக சார்பில் சென்னையில் நேற்று நடந்த இப்தார் – புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: இது திமுக இஸ்லாமியர்களின் இப்தார் நிகழ்ச்சியாக மட்டுமல்ல, அனைத்து இஸ்லாமிய பெருமக்களுடைய விழாவாக மிக மகிழ்ச்சியோடு, சிறப்போடு நடந்து கொண்டிருக்கிறது.

இஸ்லாமியர்கள் வேறு, தான் வேறு என்று கலைஞர் என்றைக்கும் நினைத்ததில்லை. அதே வழித்தடத்தில் தான் இப்போது திமுக ஆட்சி, மன்னிக்க வேண்டும், நம் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி அமைந்தவுடனே சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. சிறுபான்மையினர் விடுதியில் பண்டிகைகளுக்குச் சிறப்பு உணவு தரப்படுகிறது. உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியங்களில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் கட்டப்பட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேனி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் முஸ்லிம் உதவி சங்கம் துவங்க ஆணையிடப்பட்டுள்ளது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. உலமாக்கள் மற்றும் பணியாளர் வாரிய உறுப்பினர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கான நிர்வாக மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 4 வக்பு சரக அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டிடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள், தர்காக்கள், வக்பு நிறுவனங்கள் பழுது பார்ப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வக்பு சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2021ல் நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு செய்து கொடுக்கப்பட்டிருப்பவை. இதெல்லாம் நீங்கள் கோரிக்கை வைக்காமலேயே செய்து கொடுக்கப்பட்டவை, அதுதான் முக்கியம்.

பேராசிரியர் ஜவாஹிருல்லா சொன்னார், நேற்றைய தினம் சட்டமன்றத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, அந்த துறையின் அமைச்சர் மஸ்தான் அரசின் சார்பிலே பல அறிவிப்புகளையெல்லாம் வெளியிட்டிருக்கிறார். ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான்மையினருக்கு, ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் 2500 விலையில்லா மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ, மாணவியருக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள் துவங்கப்படும். இதுபோன்ற பல முக்கியமான அறிவிப்புகள் எல்லாம் வெளியிடப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் நீங்கள் கோரிக்கை வைக்காமலேயே செய்து தரப்பட்ட திட்டங்கள், கோரிக்கை வைக்காமலேயே செய்கிற இந்த அரசு, கோரிக்கை வைத்து செய்யாமல் விட்டுவிடுவோமா, உறுதியாக சொல்கிறேன். இது திராவிட மாடல் அரசு, கலைஞர் வழியில் நடைபெறக்கூடிய அரசு, உங்களுக்காக நடைபெறக்கூடிய அரசு, எல்லார்க்கும் எல்லாம் என்ற நெறிமுறைப்படி இயங்கக்கூடிய அரசு, அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அரசாக திராவிட மாடல் அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றைய தினம் இந்த திராவிட கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருவதை பார்க்கிறோம். இந்தியாவை காப்பாற்றும் ஆற்றல், சமூகநீதி – சகோதரத்துவம் – சமதர்மம் ஆகிய மூன்று கருத்தியல்களுக்குத்தான் உண்டு இந்த மூன்று கருத்தியல்களையும் ஏற்றுக்கொள்ளும் ஜனநாயக சக்திகள் இந்தியா முழுவதும் ஒன்று சேர வேண்டும். இந்த ஒற்றுமை தேர்தலுக்காக மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்துக்காக ஏற்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post இந்தியாவின் எதிர்காலத்துக்காக சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்மத்தை ஏற்கும் ஜனநாயக சக்திகள் ஒன்றுசேர வேண்டும்: இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister of Justice ,MC. G.K. Stalin ,Chennai ,Samadarmam ,Chief Minister ,B.C. G.K. Stalin ,
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்