×

தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு, வளங்களை வாரி வழங்கும் வைகை அணை: கடந்த ஓராண்டில் 32 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி போன்ற பகுதிகளில் உருவாகும் மழைநீர் வைகை ஆற்றில் வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த வைகை ஆற்றுக்கு குறுக்கே அணை கட்டி அந்த தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆண்டிபட்டி அருகே அணை கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 1959ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த அணையின் மொத்த உயரம் 111 அடியாகும். 71 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம். இந்த அணைக்கு வருசநாடு போன்ற பகுதிகளில் பெய்து வரும் மழை மூலவைகை ஆற்றின் வழியாக அணைக்கு நீர்வரத்தாக வந்து சேரும். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணைக்கு நீர்வரத்தாக வந்து சேரும்.கொட்டக்குடி ஆறு போன்று பகுதிகளில் பெய்யும் மழை அணைக்கு நீர்வரத்தாக வந்து சேரும். அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பிரதான ஆதாரமாக விளங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் மாதத்தில் முதல் போகத்திற்கும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதம் இரண்டாம் போகத்திற்கும் தண்ணீர் திறக்கப்படும். மேலும் தண்ணீர் தேவைக்காக ஆற்றின் வழியாக சிவகங்கை ராமநாதபுரம் பகுதியிலும் தண்ணீர் திறக்கப்படும். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களை நிரப்புவதற்கு 58ம் கால்வாய் பகுதியில் தண்ணீர் திறக்கப்படும். வைகை அணை பாசனத்தின் கீழ் 1 லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் பரப்பளவில் பாசனம் செய்யப்படுகிறது. பெரியார் பாசனத்தின் கீழ் 1 லட்சத்து 50ஆயிரத்து 43 ஏக்கர் பரப்பளவில் பாசனம் செய்யப்படுகிறது. இதில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் இருபோக பாசனப்பகுதியாகவும், 85 ஆயிரத்து 563 ஏக்கர் ஒருபோக பாசனப் பகுதியாகவும், 38 ஆயிரத்து 248 ஏக்கர் விரிவாக்கப்பட்ட பெரியார் பிரதான கால்வாயாகவும் உள்ளது.

வைகை அணை நீர்‌பிடிப்பு பகுதிகளில் கடந்த தென்மேற்கு பருவமழை காலங்களில் பலத்த மழை பெய்தது. அப்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் அதிகப்படியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து. அணையின் நீர்மட்டமும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முழுக்கொள்ளளவான 69 அடியை எட்டியது. அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து 69 அடிவரை நீடித்திருந்தது. இந்த நிலையில் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை அணையிலிருந்து 31828.41 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் கடந்தாண்டு ஜூன் மாதம் பெரியார் பாசன கால்வாயில் 1927.15 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 1714.39 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் பெரியார் பாசன கால்வாயில் 2724.27 மில்லியம் கனஅடி தண்ணீரும், வைகை ஆற்றுப் பாசனம் வழியாக 1867 மில்லியன் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் பெரியார் பாசன கால்வாயில் 4966.11 மில்லியன் கன அடி தண்ணீரும், வைகை ஆற்றுப் பாசனம் 705 மில்லியன் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் பெரியார் பாசன கால்வாயில் 2912.72 மில்லியன் கனஅடி தண்ணீரும், வைகை ஆற்றுப் பாசனத்தில் 986.88 மில்லியன் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் பெரியார் பாசன கால்வாயில் 2230.09 மில்லியன் கனஅடி தண்ணீரும், வைகை ஆற்றுபாசனத்தில் 2395.16 மில்லியன் கன‌அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் பெரியார் பாசன கால்வாயில் 3012.30 மில்லியன் கன‌அடி தண்ணீரும், வைகை ஆற்றுப் பாசனத்தில் 432 மில்லியன் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பெரியார் பாசன கால்வாயில் 2109.80 மில்லியன் கனஅடி தண்ணீரும், வைகை ஆற்றுப் பாசனத்தில் 2417 மில்லியன் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் பெரியார் பாசன கால்வாயில் 984.08 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் பெரியார் பாசன கால்வாயில் 434.48 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் பெரியார் பாசன கால்வாயில் மட்டும் கடந்த 2012-2013 ஆம் ஆண்டில் 23025.39 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வைகை ஆற்றுப்பாசனத்தில் 8803.04 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து பெரியார் பாசன கால்வாய் மற்றும் வைகை ஆற்றுப் பாசனத்தின் வழியாக மொத்தம் 31828.43 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வைகை அணை விவசாயிகளுக்கு பாசன நீராகவும், மக்களுக்கு குடிநீராகவும், சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத் தலமாகவும், மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலாகவும் என பல்வேறு வகையில் மக்களுக்கு பயன்பெற்று வருகிறது.

The post தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு, வளங்களை வாரி வழங்கும் வைகை அணை: கடந்த ஓராண்டில் 32 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Vaiga Dam ,Theni ,Madurai ,Ramanathapuram ,Andipatti ,Varasanadu ,Silimalai ,Razaradi ,Theni district ,Vaigai river ,Vaigai Dam ,
× RELATED தப்பிய பெண் கைதி 2 மணி நேரத்தில் பிடித்தது போலீஸ்