×

பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதி எல்லை, விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்க கூடாது: மின்சார வாரியம் பிட் நோட்டீஸ் விநியோகம்

பழநி: பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதி எல்லைகளில் உள்ள விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்க கூடாதென மின்சார வாரியம் சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிகள் பெரிய வனப்பரபை்பை கொண்டவை. இவ்வனப்பகுதியில் வரிப்புலி, சிறுத்தை, யானை, மான், கேளையாடு, காட்டு மாடு, காட்டுப்பன்றி, கரடி போன்ற விலங்குகள் அதிகளவு உள்ளன. வனப்பகுதியில் வறட்சி ஏற்படும் போது இவ்விலங்கினங்கள் உணவு மற்றும் குடிநீர் தேடி அடிக்கடி வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இவற்றை தவிர்க்க வனத்துறையினர் வனப்பகுதி எல்லைகளில் சோலார் மின்வேலி அமைத்தல், அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் இதுவரை போதிய பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் விவசாயிகள் தங்களது நிலங்களை சுற்றிலும் வேலி அமைத்து, அதில் விலங்குகள் நுழையாமல் இருப்பதற்காக மின் இணைப்பு கொடுத்து விடுகின்றனர். இந்த மின்வேலியில் சிக்கி யானை உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி உயிரிழக்கின்றன. தவிர, விவசாய பகுதிகளில் தாழ்வாக அமைக்கப்பட்டிருக்கும் மின் கம்பிகளில் உரசியும் ஏராளமான வனவிலங்குகள் உயிரிழக்கின்றன. இதனை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, தாசிரிபட்டி, ஆயக்குடி, புதச்சு, பெரியம்மாபட்டி, அய்யம்புள்ளி, பாலசமுத்திரம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களை கண்டறிந்து 33 இடங்களில் தாழ்வாக உள்ள உயர் மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளை சரிசெய்தனர்.

தொடர்ந்து புதிய மின்கம்பம் நடுதல், மின்பாதைகளின் அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், மின்கம்பங்களை சுற்றிலும் முள்கம்பி வேலி சுற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மேலும் இக்கிராமங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்கக் கூடாதென துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர். இந்நிகழ்வில் மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதி எல்லை, விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்க கூடாது: மின்சார வாரியம் பிட் நோட்டீஸ் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Palani ,Ottanchatram forest ,Electricity Board ,Otanchatram ,Palani, ,Otanchatram forest ,Dinakaran ,
× RELATED பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு