×

உத்தரபிரதேச அரசியலை மையப்படுத்தும் சாதியும், மதமும்: அன்று என்கவுன்டரில் விகாஸ் துபே… இன்று மாஜி எம்பி மகன் ஆசாத் அகமது

ஜான்சி: உத்தரபிரதேச அரசியலை மையப்படுத்தும் விதமாக அன்று உயர்சாதி வகுப்பை சேர்ந்த விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ஆசாத் அகமது சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 2005ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜூ பால் என்பவர் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில், மாபியாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய, சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பி ஆதிக் அகமது, அவரின் சகோதரர் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் இந்தக் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த வழக்கறிஞர் உமேஷ் பால் என்பவர் கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று பிரக்யராஜில் அவரின் வீட்டருகே ஐந்து பேர்கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், உமேஷ் பால் கொலையின் பின்னணியில் ஆதிக் அகமது இருப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளிப்படையாகவே கூறிவந்தார். அதைத் தொடர்ந்து, உமேஷ் பால் கொலையில் ஈடுபட்டவர்களில் இருவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். அதோடு இதுதொடர்பாக ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது என்பவரையும், குலாம் என்பவரையும் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு, தலைக்கு 5 லட்சம் ரூபாய் என அறிவித்து போலீசார் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் ஜான்சி நகரில் ஆசாத் அகமது, குலாம் ஆகியோர் உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படையினாரால் ஜான்சியில் என்கவுன்ட்டரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த என்கவுன்ட்டர் குறித்து உத்தரப் பிரதேச போலீஸ் தரப்பில், ‘வழக்கறிஞர் உமேஷ் பால் கொலைக்குப் பின்னர் லக்னோ, கான்பூர், மீரட், டெல்லி என இடம்பெயர்ந்து கொண்டே இருந்த ஆசாத் அகமது குறித்து, போலீஸ் ‘இன்ஃபார்மர்’ ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரை கைது நடவடிக்கையை திட்டமிட்டோம். இதற்காக இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் 12 போலீசார் ஆசாத் அகமது மற்றும் குலாமை கைது செய்ய விரைந்தனர். ஜான்சி அருகே ஆசாத் அகமதுவையும், குலாமையும் அதிரடிப் படை சுற்றிவளைத்தது அப்போது குலாம் அதிரடிப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனையடுத்து நடந்த பதில் தாக்குதலில் ஆசாத் அகமதுவும், குலாமும் கொல்லப்பட்டனர். மொத்தம் 42 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொலையான இருவரிடமும் இருந்து செல்ஃபோன், சிம் கார்டுகள், வால்டர் பி 88 ரக பிஸ்டல்கள் இன்னும் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஆதிக் அகமதுவை போலீசார் சபர்மதி சிறையிலிருந்து சாலை மார்க்கமாக அழைத்துவந்தனர். அதேபோல் அவரது சகோதரர் காலீத் ஆசிம் என்ற அஷ்ரஃபை பெரேலி சிறையிலிருந்து அழைத்து வந்தனர். இருவரையும் பிரயாக்ராஜ் சிறையில் ஆஜர்படுத்தினர். ஆசாத் அகமது கொலையான தகவல் அத்திக் அகமது நீதிமன்றத்தில் இருக்கும்போது தெரிவிக்கப்பட்டது. இதனையறிந்த ஆதிக் அகமது கதறி அழுதார். முன்னதாக நீதிமன்ற வளாகத்திற்கு ஆதிக் அகமது அழைத்து வரப்படும்போது அவர் மீது பார்வையாளர்களில் ஒருவர் பாட்டிலை வீசி எறிந்தார். ஆனால் அது அவர் மீது பாட்டில் படவில்லை. வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை செய்யப்பட்டு 49வது நாளில், உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய என்கவுன்டரில், ஆதிக் அகமதுவின் மூன்றாவது மகன் ஆசாத் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட விஷயம் தேசிய ஊடகங்களில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஆசாத் அகமது, குலாம் ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விஷயத்திற்கும், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி, பிரபல தாதா விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. இரு என்கவுன்டர் சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது. ஆசாத் அகமதுவும், விகாஸ் துபேவும் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். விகாஸ் துபேவை பொருத்தமட்டில் கார் விபத்துக்குள்ளானது. ஆசாத் அகமதுவை பொருத்தமட்டில் பைக் விபத்தில் சிக்கியது.

ஆசாத் அகமது மற்றும் விகாஸ் துபே ஆகிய இருவரும், உத்தரபிரதேச போலீசாரை தாக்கியும், கொன்றும் உள்ளதாக வழக்குகள் உள்ளன. ஆசாத் அகமதுவை பொருத்தமட்டில் அவரது தந்தை சிறைக்கு சென்ற பின்னர், அவரது 19வது வயதில் இருந்தே ஒரு தாதாவாக மாறினார். ஒட்டுமொத்த கும்பலையும் தனது கட்டுக்குள் வைத்திருந்தார். விகாஸ் துபேவை பொருத்தமட்டில் கடந்த சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு, கான்பூரின் பிக்ருவில் அவரைக் கைது செய்ய வந்த போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த 8 நாட்களில், விகாஸ் துபே உட்பட 6 குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக் கொன்ற போது ‘உயர்சாதி’ அடையாளம் பேசப்பட்டது. தற்போது ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட விஷயத்தில் ‘மத’ அடையாளம் பேசப்பட்டு வருகிறது. விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து, உத்தரபிரதேச உயர்சாதி பிரிவினர் பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அப்போது எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சிக்கு எதிராக குரல்களை எழுப்பின. தற்போது ஆசாத் அசாத், குலாம் என்கவுன்டர் விஷயத்தில் ஐதராபாத் எம்பியும், ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவருமான அசாதுதீன் ஒவைசி வெளியிட்ட பதிவில், ‘ஜுனைத் மற்றும் நசீரைக் கொன்றவர்களை, இதேபோன்று என்கவுன்டர்களை பாஜக அரசு நடத்துமா? மதத்தின் பெயரால் பாஜக என்கவுன்டரை நடத்துகிறது. சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய விரும்புகிறீர்கள்’ என்று கடுமையாக சாடியுள்ளார்.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட சபர்மதி சிறையில் இருந்து பிரயாக்ராஜ் நீதிமன்றதிற்கு அழைத்து வரப்பட்ட ஆசாத் அகமதுவின் தந்தையான ஆதிக் அகமது, ‘என்னை வாகனத்தில் அழைத்து வரும் போது போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுவிடுவார்கள்’ என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முன்னாள் எம்பியான இவர் மனு விசாரணையில் இருக்கும் நிலையில், அவரது மகன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது உத்தரபிரதேச அரசியலில் மட்டுமின்றி இந்தி பேசும் மாநிலங்களில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

புது இந்தியாவாம்…
உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், ‘ஆசாத் அகமது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மற்ற கிரிமினல்களுக்கு ஓர் அழுத்தமான செய்தி சென்று சேர்ந்திருக்கும். உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு வாழ்த்துகள். இது புதிய இந்தியா என்ற செய்தி கிரிமினல்களுக்கு சென்றிருக்கும்’ என்றார்.

6 ஆண்டில் 183 பேர் சுட்டுக் கொலை
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான கடந்த ஆறு ஆண்டுகால பாஜக ஆட்சியில் (2017 மார்ச் முதல் 2023 மார்ச் 6ம் தேதி வரை) மாநிலம் முழுவதும் நடந்த 10,713 என்கவுன்டர்களில் 183 குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த என்கவுன்ட்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பட்டியலில் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு 13 நாட்களுக்கும் ஒரு குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த என்கவுன்டர்களைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி இதுவரை 23,069 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4,911 பேர் காயமடைந்துள்ளனர். என்கவுன்டரின் போது குற்றவாளிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீசார் இறந்துள்ளனர். மேலும் 1,424 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

போலி என்கவுன்டர்
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட பதிவில், ‘போலி என்கவுன்டர்கள் மூலம் பாஜக அரசு மக்களின் கவனத்தை மாநிலத்தில் நிலவும் உண்மையான பிரச்னைகளில் இருந்து திசை திருப்பப் பார்க்கிறது. பாஜகவுக்கு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையில்லை. இன்றைய என்கவுன்டராக இருக்கட்டும், இதற்கு முன்னர் சமீபத்தில் நடந்த என்கவுன்ட்டர்களாக இருக்கட்டும், அனைத்துமே தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் எது சரி, எது தவறு என்பதை முடிவு செய்யக் கூடாது. பாஜக நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுகிறது‘ என்று பதிவிட்டுள்ளார்.

‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’
ஆசாத் அகமது மற்றும் விகாஸ் துபே ஆகிய இருவரையும் என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற விவகாரத்தில் சிறப்பு அதிரடிப்படையின் தலைவர் அமிதாப் யாஷ் என்பவர் வழிநடத்தினார். இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளார். கடந்த 1996ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அமிதாப் யாஷ், ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று சக போலீசாரால் அழைக்கப்படுகிறார். கடந்த 2007ம் ஆண்டு மாயாவதி ஆட்சி காலத்தில், அமிதாப் யாஷ் சிறப்பு அதிரடிப்படையின் எஸ்எஸ்பி பணியில் அமர்த்தப்பட்டார். அப்போது ​​பந்தல்கண்ட் காடுகளில் பதுங்கியிருந்த கொள்ளை கும்பைலை சுட்டுக் கொன்று பிரபலமானார். கடந்த 2021 ஜனவரியில் சிறப்பு அதிரடிப்படையின் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றார்.

The post உத்தரபிரதேச அரசியலை மையப்படுத்தும் சாதியும், மதமும்: அன்று என்கவுன்டரில் விகாஸ் துபே… இன்று மாஜி எம்பி மகன் ஆசாத் அகமது appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Vikas Dube ,Azad Ahmed ,Maji MP ,JANSI ,Vikas Dubey ,Uttar ,Asad Ahmed ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...