×

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் 11,900 ஏக்கரில் எள் பயிர் சாகுபடி

திருவாரூர், ஏப். 14: காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து நீரானது உரிய முறையில் கிடைத்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் விவசாயிகள் 3 போக நெல் சாகுபடி மேற்கொண்டு வந்தனர். அதன்பின்னர், மேட்டூர் அணையிலிருந்து உரிய நீர் கிடைக்காது மற்றும் பருவமழை பொய்த்துப் போவது போன்ற காரணங்களினால் 3 போகம் என்பது 2 போகமாக மாறி அதன் பின்னர் ஒருபோக சாகுபடியாக மாறியது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மேட்டூர் அணையானது ஜூன் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட்டது. மேலும் கடந்தாண்டு வரலாற்றில் இல்லாத வகையில் மே மாதம் 24ம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

இவ்வாறு கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்திலும், வரலாற்றில் இல்லாத வகையில் முன்கூட்டியும் திறக்கப்பட்டதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதலான அளவில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டில் வழக்கமான சாகுபடி பரப்பளவை விட கூடுதலாக 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு என மொத்தம் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி மேற்கொண்ட நிலையில் கடந்தாண்டு அதை விட கூடுதலான பரப்பளவாக மொத்தம் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது.

அதேபோல் சம்பா சாகுபடியும் நடைபெற்ற நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 3 லட்சத்து 72 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்று அறுவடை பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் 522 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தற்போது வரையில் ஐந்தரரை லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறியுள்ளனர்.

அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் உளுந்து பயிர் சாகுபடி மட்டுமின்றி பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு, எள், சோளம் உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். எள்ளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக இருப்பதுடன் எலும்புகள் உறுதியாக இருக்கவும், ரத்த சிவப்பு அனுக்கள் உற்பத்தி அதிகரிக்கவும், தைராய்டு நோயினை குறைப்பதற்கான செலினியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்த தானியமாகும். இதனை வெல்லம் சேர்த்து எள் உருண்டையாகவோ அல்லது எள் சட்னி உட்பட பல்வேறு வகைகளில் உபயோகிக்கலாம். மேலும் இந்த எள் தானியத்தை கொண்டு தயார் செய்யப்படும் நல்லெண்ணெய் என்பது மனித உடலுக்கு பயன்பட கூடிய முக்கிய பொருளாக இருந்து வருவதும் குறிப்பிடதக்கது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இந்த எள் பயிரினை நடப்பாண்டில் 8 ஆயிரத்து 750 ஏக்கரில் சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இதுவரையில் இந்த இலக்கை மிஞ்சி கூடுதலாக 3 ஆயிரத்து 150 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு மொத்தம் 11 ஆயிரத்து 900 ஏக்கரில் இந்த எள் பயிரினை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அதன்படி, திருவாரூர் ஒன்றியத்தில் இதுவரையில் 652.5 ஏக்கரிலும், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 2 ஆயிரத்து 712.5 ஏக்கரிலும், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 250 ஏக்கரிலும், மன்னார்குடி ஒன்றியத்தில் ஆயிரத்து 422.5 ஏக்கரிலும், கோட்டூர் ஒன்றியத்தில் 5 ஆயிரத்து 252.5 ஏக்கரிலும், நன்னிலம் ஒன்றியத்தில் 212.5 ஏக்கரிலும், நீடாமங்கலம் ஒன்றியத்தில் 740 ஏக்கரிலும், குடவாசல் ஒன்றியத்தில் 282.5 ஏக்கரிலும், கொரடாச்சேரி ஒன்றியத்தில் 280 ஏக்கரிலும், வலங்கைமான் 95 ஏக்கரிலும் என மாவட்டம் முழுவதும் இதுவரையில் 11 ஆயிரத்து 900 ஏக்கரில் இந்த எள் பயிர் சாகுபடி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் 11,900 ஏக்கரில் எள் பயிர் சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,Mettur dam ,Cauvery delta ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி