×

அதிகாரிகள் வராததால் குறைதீர் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு

புதுக்கோட்டை, ஏப்.14: புதுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் நீண்ட நேரமாக அதிகாரிகள் வராததால், கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூன்று ஆர்டிஓ அலுவலகங்களில் அந்தந்த பகுதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். புதுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை விவசாய குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவதும் வழக்கம். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் புதுக்கோட்டை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளின் குறைகளை கேட்பதற்காக நேற்று கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தகவல் அனுப்பி இருந்த நிலையில் விவசாயிகள் காலை 11 மணி முதல் கூட்ட அரங்கில் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் காலை 11.40 மணி வரை எந்த ஒரு அதிகாரிகளும் கூட்டத்திற்கு வராததால் கூட்ட அரங்கில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து கூட்டத்தை புறக்கணித்து அலுவலக வளாகம் அருகே முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் பொறுப்பு ஆர்டிஓ மாரி, கூட்டரங்கிற்கு வந்தார். அவரோடு பல்வேறு துறை அதிகாரிகளும் வந்தனர். இருப்பினும் விவசாயிகள் ஏற்கனவே கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து விட்டதால், அலுவலகங்கள் மட்டும் கூட்ட அரங்கில் அமர்ந்திருந்தனர். மேலும் வெளியே சென்று விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

The post அதிகாரிகள் வராததால் குறைதீர் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Pudukottai RTO ,
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி