×

மதுரை கலெக்டர் அலுவலகம், ஆவின், அப்பல்லோ சந்திப்புகளில் ரூ.150.28 கோடியில் உயர்மட்ட பாலம்: தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியீடு

மதுரை, ஏப். 14: மதுரை – தொண்டி சாலையில், கலெக்டர் அலுவலக சந்திப்பு, ஆவின் சந்திப்பு மற்றும் அப்பல்லோ சந்திப்பு வழியாக உயர் மட்ட பாலம் கட்டுவதற்கு ரூ.150.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மதுரையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் மதுரை எல்லைக்குள் மட்டும் 19.20 கி.மீ தூரம் உள்ளது. இச்சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ளதால், கலெக்டர் அலுவலக சந்திப்பு, ஆவின் சந்திப்பு, அப்பல்லோ சந்திப்பு ஆகிய பகுதிகள் வழியாக மேம்பாலம் கட்ட வேண்டும் என மதுரை மக்கள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பாலம் கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்யும்படி, நெடுஞ்சாலைத்துறைக்கு முதலமைச்சர் பரிந்துரை செய்தார். இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை மதுரை – தொண்டி சாலையை ஆய்வு செய்தது. அதில், கலெக்டர் அலுவலக சந்திப்பு, ஆவின் சந்திப்பு, அப்போலோ சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும். இவற்றில் ஒரு மணி நேரத்திற்கு 10 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்வதாகவும் தினமும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதனால், கலெக்டர் அலுவலக சந்திப்பு முதல் வண்டியூர் புறவழிச்சாலை சந்திப்பு வரை உயர்மட்ட பாலம் தேவை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்பகுதியில் பாலம் கட்டுவது, நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த பணிகளுக்கான மொத்த செலவு ரூ.163 கோடியே 84 லட்சம் என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாநில நெடுஞ்சாலைத்துறை தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம், ஆவின் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை சந்திப்புகள் வழியாக ரூ.150 கோடியே 28 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு வழங்கியுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கான அரசாணையை மாநில நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார்.

The post மதுரை கலெக்டர் அலுவலகம், ஆவின், அப்பல்லோ சந்திப்புகளில் ரூ.150.28 கோடியில் உயர்மட்ட பாலம்: தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Madurai Collector's Office ,Bridge ,Aavin ,Apollo ,Government of Tamil Nadu ,Madurai ,Thondi Road ,Madurai collector ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...