×

அரவக்குறிச்சி பகுதியில் அதிவேக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்

அரவக்குறிச்சி, ஏப். 14: அரவக்குறிச்சியில் முக்கிய சாலைகளாக கரூர் சாலை, சின்னத்தாராபுரம் சாலை, கடை வீதி, பள்ளபட்டி சாலை, புங்கம்பாடி சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் வழியாகத்தான் அரவக்குறிச்சிக்குள் வரவேண்டும். தினசரி இந்த சாலைகளில் பள்ளி வாகனங்கள், லாரிகள், பயணிகள் பேருந்துகள், இவ்வழியாக திண்டுக்கல், கரூர், பழனி, பொள்ளாச்சி, உடுமலை, கோவை என்று பல்வேறு மாவட்டத்திலுள்ள ஊர்களுக்கு என அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன். ஆகையால் இச்சாலைகளில் அதிக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாச் செல்லுகின்றன. குறிப்பாக லாரிகள், கார்கள், சில பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவைகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் வேகத்திற்கும் மேலாக இச்சாலைகளில் செல்லுகின்றன. அதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.

சாலை பாதுகாப்பு விதிகளின்படி தேசிய சாலைகளில் 70 கிமீ, மாநில சாலைகளில் 60 கிமீ, நகர்புறச் சாலைகளில் 45 கிமீ வேகத்திலும் செல்ல வேண்டும். இந்த சாலை விதிகளை கடைபிடிக்காமல் நகர்புறங்களிலேயே ஹாரணை அலர விட்டுக் கொண்டு அதிவேகமாக செல்லுகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் அச்சத்தில் பதற்றம் அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலான வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவியும் இல்லை. அதிவேகமாகச் செல்லும் செல்லும் வாகனங்களால் பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் அரவக்குறிச்சி பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

The post அரவக்குறிச்சி பகுதியில் அதிவேக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Karur Road ,Chinnatharapuram Road ,Shop Road ,Pallapatti Road ,Pungambadi ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...