×

பயனளிக்காத மாநகராட்சி திட்டம்?பாளையில் திசை மாறிய சைக்கிள் பாதை

நெல்லை, ஏப். 14: பாளை என்ஜிஒ காலனியில் சைக்கிள் ஓட்டுவோர் பாதுகாப்பாக செல்லும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் நெல்லை மாநகராட்சி சார்பில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தனிப்பாதை திட்டம், முறையான பராமரிப்பின்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோடு திசை மாறிவிட்டதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இதுவிஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி முறையாக கண்காணித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

மாறிவரும் கணினி யுகத்தில் 30 ஆண்டுகளுக்கு முந்தைய சைக்கிள் பயன்பாடு தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் சைக்கிளை விலை கொடுத்து வாங்குவது நடுத்தர மக்களுக்கு பெரிய செலவாகக் கருதப்பட்டது. ஆயினும் அன்றைய வாழ்க்கை நடைமுறையில் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. சாலைகளில் எரிபொருள் நிரப்பப்பட்ட இருசக்கர வாகனங்களை விட சைக்கிள்களே அதிகம் ஆக்கிரமித்தன. சைக்கிளில் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் இருச்சக்கர வாகனங்களில் செல்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் இருந்த காலம் அது. தற்போது இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சாலைகளில் பைக், ஸ்கூட்டர் மற்றும் மகிழுந்துகள் என அழைக்கப்படும் கார்களின் போக்குவரத்து அதிகமாகிவிட்டது. சைக்கிளில் செல்வோரின் எண்ணிக்கை தற்போது சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளது.

அன்றாடம் குறைந்த தூரம் செல்லும் பணிகளுக்கு சைக்கிளை மட்டுமே உபயோகிப்பவர்களின் உடல்நலமும் ஆரோக்கியமாக உள்ளது. சைக்கிள் பயன்படுத்துவதால் புகைமாசு போன்ற தொல்லையும், பிற எரிபொருள் செலவும் கிடையாது. எனவே மீண்டும் சைக்கிள் பயன்பாட்டு அதிகரிக்கவேண்டும் என வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி சைக்கிள் கிளப் அமைப்புகளை ஊக்கப்படுத்தின. மாநகராட்சி சார்பில் முதற்கட்ட முயற்சியாக பாளை என்ஜிஒ காலனி பகுதியில் சைக்கிள்களின் பயணிப்பவர்கள் பாதுகாப்பாக செல்ல வசதியாக அவர்களுக்கு மிதிவண்டி தனிப்பாதை (சைக்கிள் டிராக்) அமைத்து கொடுக்கப்பட்டது. அந்தப்பகுதி வாகனஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் நீல நிறத்தில் தளம் அமைக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே சைக்கிள் டிராக் என்ற விழிப்புணர்வு பலகைகளும் அமைக்கப்பட்டன.

இந்த சைக்கிள் பாதை ஆரம்பத்தில் பலர் பயன்படுத்திய நிலையில் தொடர்ந்து ஊக்கப்படுத்தும் நிகழ்வுகள் இல்லாத நிலையில் பலர் இச்சாலையை ஆக்கிரமித்துள்ளனர். தேவையற்ற மண் மற்றும் பிற பொருட்கள் இந்த பாதையில் கொட்டப்பட்டு நடந்துசெல்லக்கூட முடியாத நிலை உள்ளது. இவ்வாறு பாளை என்ஜிஒ காலனியில் சைக்கிள் ஓட்டுவோர் பாதுகாப்பாக செல்லும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் நெல்லை மாநகராட்சி சார்பில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தனிப்பாதை, முறையான பராமரிப்பின்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோடு திசை மாறிவிட்டதாக புகார் தெரிவித்துள்ள பொது மக்கள், இதுவிஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி முறையாக கண்காணித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அத்துடன் மாநகரின் பிறபகுதிகளிலும் சைக்கிள் பாதை அமைத்து ஊக்குவிக்க தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பயனளிக்காத மாநகராட்சி திட்டம்?
பாளையில் திசை மாறிய சைக்கிள் பாதை
appeared first on Dinakaran.

Tags : Palai ,Nellie ,Balai ,NGO ,Colony ,
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...