×

ஆங்கில மருத்துவம் பார்த்த 2 போலி டாக்டர்கள் கைதுகிளினிக் சீல் வைப்புஹோமியோபதி, சித்தா படித்துவிட்டு

வேலூர், ஏப்.14: சத்துவாச்சாரியில் ஹோமியோபதி, சித்த மருத்துவம் படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் நடத்திய கிளினிக் சீல் வைக்கப்பட்டது. இந்திய மருத்துவ கவுன்சிலில் முறையாக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், அரசால் அங்கீகரிக்கப்படாமல் மாற்று மருத்துவ முறையில் டாக்டராக தொழில் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் சுகாதாரத்துறையினர், போலீசார் இணைந்து நடத்திய திடீர் சோதனையில் திருவண்ணாமலை உட்பட தமிழகம் முழுவதும் 72 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவ சுகாதாரத்துறை, இணை இயக்குநர் கண்ணகிக்கும் புகார்கள் வந்தது. இதையடுத்து, இணை இயக்குநர் கண்ணகி தலைமையில், சத்துவாச்சாரி போலீசாருடன் இணைந்து சத்துவாச்சாரி பகுதிகளில் உள்ள கிளினிக் மற்றும் மெடிக்கல் ஷாப்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, விஜயராகவபுரம் பகுதியில் நடந்த சோதனையில் ஹோமியோபதி மருத்துவ கிளினிக் என போர்டு வைத்துக்கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்தும் நோயாளிகளுக்கு ஊசியும் போட்டு வந்த வெங்கடேசன்(50) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலி கிளினிக்கும் சீல் வைக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ரங்காபுரம் புலவர் தெருவை சேர்ந்தவர் தயாளன்(70). இவர் சித்த மருத்துவத்தில் ஆர்எம்பி படித்துவிட்டு, தனது வீட்டில் கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு ஆங்கில முறைப்படி மருந்து, மாத்திரைகள் அளித்து ஊசி போட்டு வந்துள்ளார். இதைதொடர்ந்து போலீசார் போலி டாக்டர் தயாளனை கைது செய்து கிளினிக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து 2 போலி டாக்டர்களை கைது விசாரித்து வருகின்றனர். வேலூரில் ஒரேநாளில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆங்கில மருத்துவம் பார்த்த 2 போலி டாக்டர்கள் கைது
கிளினிக் சீல் வைப்பு
ஹோமியோபதி, சித்தா படித்துவிட்டு
appeared first on Dinakaran.

Tags : Vellore ,Sattuvachari ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...