×

கட்சி தான் முக்கியம்

கர்நாடக மாநில தேர்தல் மே 10ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியல் அறிவித்துவிட்டது. பாஜவில் மூத்த தலைவர்களை தேர்தல் அரசியலில் இருந்து விலக சொன்னதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கலும் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இடையே யார் முதல்வர் வேட்பாளர் என்ற பனிப்போர் இலைமறை காயாக தொடர்ந்து வருகிறது. இருவரின் ஆதரவாளர்களும் அடிக்கடி இது குறித்து விவாதம் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், கார்கே முதல்வரானால் அவரது தலைமையின் கீழ் பணியாற்ற தயார் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்தார். இதனால் சித்தராமையாவை அவர் ஓரம்கட்ட விரும்புகிறார் என்று கட்சி வட்டாரத்தில் பேசத்தொடங்கினார்கள். ஆனால் டி.கே.சிவகுமார் கூறுகையில், தேசிய தலைவராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூத்த தலைவர் கார்கே உயர்ந்துள்ளார். அவர் இதற்கு முன்பு மூன்று முறை முதல்வர் போட்டியில் பங்கேற்று விட்டுக்கொடுத்துள்ளார். கர்நாடக
மாநிலத்தில் அடிக்கடி தலித் முதல்வர் என்ற பேச்சு அடிபடுகிறது. அப்படி இருக்கும் போது கார்கே ஏன் முதல்வராக கூடாது. கட்சி தலைமை அப்படி முடிவெடுத்தால் சித்தராமையா உள்பட அனைவரும்
கட்டுப்பட வேண்டும் என்றார்.

இதை அமோதிக்கும் வகையில் சித்தராமையாவும் கட்சி தலைமை முடிவே இறுதியானது என்றார். அதே நேரம் தலித் முதல்வர் போட்டியில் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரும், கே.எச்.முனியப்பாவும் இருக்கின்றனர். சித்தராமையா முதல்வராக இருந்த போது தலித் முதல்வர் என்ற வாதம் எழுந்த நேரம் பரமேஸ்வர் அதை தீவிரமாக ஆதரித்தார். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அதே போல் அடிப்படை காங்கிரஸ்காரர்கள், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் என்று இருபிரிவாகவும் செயல்பட்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநில தலைவர் டி.கே.சிவகுமார் முதல்வர் குறித்து கூறிய கருத்து பரபரப்பாகியுள்ளது. ஆனால், முதல்வர் யார் என்பது முக்கியமல்ல. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். கட்சி தான் முக்கியம் என்று டி.கே.சிவகுமார் விளக்கமளித்தார்.

கர்நாடக தேர்தலில் காங்கிரசின் வெற்றியை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். இந்த நேரத்தில் தேவையற்ற குழப்பத்தை கட்சிக்குள் வளர்க்க கூடாது என்று மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல்வர் வேட்பாளர் குறித்து யாரும் தேர்தல் முடியும் வரை பேசவே கூடாது என்று கடுமையான உத்தரவை கட்சி மேலிடம் பிறப்பித்துள்ளது. கட்சியின் வெற்றியே முக்கியம் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு எதிராக பாஜ வலுவான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் பிரசாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே தேர்தலில் சீட் கிடைக்காத பாஜ தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், காங்கிரசிலும் தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post கட்சி தான் முக்கியம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Congress ,Janata Site ,Amadmi ,
× RELATED காங்கிரசில் இணைந்தார் கர்நாடக பாஜ எம்.பி