×

குரூப் 2 மெயின் மறு தேர்வு நடத்த வழக்கு: டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு

மதுரை: குரூப் 2 மெயின் மறு தேர்வு நடத்தக் கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே காரேந்தல் மைலியைச் சேர்ந்த கருப்பையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புதவற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த 23.2.2022ல் வெளியிட்டது. துவக்கநிலை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றதால், மெயின் தேர்வுக்கு தேர்வானேன். மெயின் தேர்வில் காலையில் தமிழ் தகுதித் தேர்வும், மதியம் பொது அறிவுக்கான தேர்வும் என 2 வேளைகளில் நடந்தது. கடந்த பிப். 25ல் மதுரை புட்டுத்தோப்பில் உள்ள பள்ளியில் நடந்த மெயின் தேர்வில் நான் பங்கேற்றேன். இதில் எனக்கும் மற்றும் பலருக்கும் பதிவு எண்கள் மாறியிருந்த வினா – விடைத்தாள்கள் வழங்கப்பட்டன. இதை சரி செய்து வழங்க ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமானது.

சிலர் போனிலும், சிலர் புத்தகத்திலும் இருந்து குறிப்பெடுத்துக் கொண்டனர். இதனால், காலையில் 10.45 மணிக்கும், மாலையில் 2.30 மணிக்கும் தான் துவங்கியது. இதனால், நல்ல மனநிலையில் யாரும் தேர்வு எழுத முடியவில்லை. தமிழ்நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் இந்த குழப்பம் நடந்துள்ளது. ஆனால், இந்த குழப்பத்தின் தீவிரத்தை உணராத டிஎன்பிஎஸ்சி கூடுதல் நேரம் வழங்கியதாக கூறியுள்ளது. எனவே, மெயின் தேர்வில் மதியம் நடந்த பொது அறிவுக்கான வினாத்தாளை மதிப்பீடு செய்யத் தடை விதிக்க வேண்டும். மதியம் நடந்த தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுவிற்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 26க்கு தள்ளி வைத்தார்.

The post குரூப் 2 மெயின் மறு தேர்வு நடத்த வழக்கு: டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Group 2 ,DNPSC ,Madurai ,iCort ,Group ,Virutunagar ,Dinakaran ,
× RELATED குரூப் 2, குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள்...