×

தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.10 லட்சம் தனி வீடுகள் நகர்ப்புற ஏழைகளுக்கு 30,000 அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை: தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.10 லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் என்றும், நகர்ப்புற ஏழைகளுக்கு 30,000 அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:
நில உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு தாமாக வீடு கட்டிக் கொள்ள ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் மாநகரங்கள், நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் தனி வீடுகள் கட்டும் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. அதன்படி, நடப்பு நிதியாண்டில், இத்திட்டத்தின்படி, பயனாளிகளுக்கு தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1,10,000 தனி வீடுகள் கட்டப்படும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் நகர்ப்புற ஏழை மக்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு தகுதியான நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அதன்படி, நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் 30,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பகுதியில் ரூ.7 கோடி திட்ட மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்படும். மேலும் ரூ.9 கோடி மதிப்பீட்டில் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கூடுதல் குடிநீர்த் தொட்டி அமைக்கப்படும். ரூ.4 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானம் ஒன்று கட்டப்படும். சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டம் போன்ற திட்டப் பகுதிகளில் உள்ள மனைகளில் வசித்து வரும் குடும்பங்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கப்படும். வாரிய குடியிருப்புகளில் வாழும் இளைஞர்களின் திறன்களை ஊக்குவித்து, அவர்களின் வாழ்க்கை நிலையினை மேம்படுத்தும் வகையில் திட்டப் பகுதிகளில் இளைஞர் மன்றங்கள் அமைக்கப்படும். மேலும் வாரிய திட்ட பகுதிகளில் வாழும் 12 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்புகள் பெற ஊக்குவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.10 லட்சம் தனி வீடுகள் நகர்ப்புற ஏழைகளுக்கு 30,000 அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Thamo Anparasan ,Chennai ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...