×

தலைமன்னார் –தனுஷ்கோடி இடையே சென்னை மாற்றுத்திறனாளி வாலிபர் கடலில் நீந்தி சாதனை: 20 மணிநேரம் 20 நிமிடத்தில் கடந்தார்

சென்னை: சென்னையை சேர்ந்த ராஜசேகரன் – வனிதா தம்பதியின் மகன் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் (29). பிறக்கும்போதே கை, கால்கள் செயல்படாத மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான இவர், சிறு வயது முதலே நீச்சலில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். 2018ல் தேசிய அளவிலான விருது பெற்றவர். 2019ல் அபுதாபியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று 50 மீட்டர் நீச்சல் போட்டியில் முதலிடம் வந்து தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்aதார். இலங்கையின், தலைமன்னார் அருகிலுள்ள ஊர்முனை கடற்கரையில் படகில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5.10 மணிக்கு பாக் ஜலசந்தி கடலில் குதித்து மார்பை அசைத்து ‘ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்’ முறையில் நீந்த துவங்கினார். இவருக்கு பாதுகாப்பாக மீட்பு படகுகள் மற்றும் விசைப்படகில் பயிற்சியாளர் மற்றும்நீச்சல் வீரர்கள் வந்தனர். இரவு முழுவதும் கடலில் நீந்தியபடி வந்தவர் நேற்று பகல் 1.30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியை வந்தடைந்து சாதனை படைத்தார். கரையேறிய ஸ்ரீராம் ஸ்ரீநிவாசை ராமேஸ்வரம் டிஎஸ்பி உமாதேவி சால்வை போர்த்தி பாராட்டினார். பாக் ஜலசந்தி கடலை ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் முறையில் 20 மணி நேரம் 20 நிமிடத்தில் நீந்திக் கடந்து சாதனை படைத்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாசை சக வீரர்கள், சுற்றுலாப்பயணிகள், மீனவர்கள் பாராட்டினர்.

The post தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே சென்னை மாற்றுத்திறனாளி வாலிபர் கடலில் நீந்தி சாதனை: 20 மணிநேரம் 20 நிமிடத்தில் கடந்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thalaimannar ,Dhanushkodi ,Sriram Srinivas ,Rajasekaran ,Vanitha ,
× RELATED தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு...