×

காஞ்சிபுரம் பட்டு பூங்கா பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும்: சட்டப்பேரவையில் எம்எல்ஏ எழிலரசன் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பட்டு பூங்கா அமைந்துள்ள பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ எழிலரசன் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் எம்எல்ஏ எழிலரசன் பேசியதாவது: காஞ்சிபுரம் என்றால் பட்டு நகரம், கோயில் நகரம் என்று அறியக்கூடியது. நகரில் 365 நாட்களும் அனைத்து கோயில்களிலும் இருந்து பல்வேறு திருவிழாக்கள், தேரோட்டம் என களை கட்டும். ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், விளக்கொளி பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் என்று தொன்மை வாய்ந்த கோயில்கள் அதிக அளவில் இருக்கின்றன.

இந்த கோயில் திருவிழாக்களின்போது, தேரோட்டம் செல்லும் வீதிகளில் புதைவட கம்பிகள் அமைக்கக் கூடிய திட்டம் குறித்து ஏற்கனவே கேள்வி எழுப்பி உள்ளேன். அதில், முதல் கட்டமாக 4 ராஜ வீதிகள் இந்த ஆண்டு எடுத்துக் கொள்ளப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன். மேலும், அண்ணா நூற்றாண்டு பட்டு பூங்கா செயல்படுத்துவதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்பாடுகள் தொடங்கி விட்டன. எனவே, அப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டியுள்ளது. அதனை உடனடியாக அமைக்க முன்வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post காஞ்சிபுரம் பட்டு பூங்கா பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும்: சட்டப்பேரவையில் எம்எல்ஏ எழிலரசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Pattu Park ,MLA ,Ezhilarasan ,Kanchipuram ,Legislative Assembly ,Kanchipuram Silk Park ,Ehilarasan ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...