×

பல நூறு ஏக்கரில் பயிரிட்ட தர்பூசணி அழுகி வீணானது: விவசாயிகள் கவலை

செய்யூர்: லத்தூர் ஒன்றியத்தில் வைரஸ் தாக்கத்தால் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தர்பூசணிகள் அழுகி வீணானது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். செய்யூர் அடுத்த லத்தூர் ஒன்றியத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் பல ஏக்கர் பரப்பளவில் கொடி வகை பயிர்களான கிர்ணி, தர்பூசணி ஆகியவற்றை பயிரிடுகின்றனர். சொட்டு நீர் பாசனம் மூலம் பயிரிடும் பயிர்கள் நன்றாக வளர்ந்து பழங்களாக மாறியதும் அவைகளை அறுவடை செய்து உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். 

இந்தாண்டும் வழக்கம்போல் விவசாயிகள் 600 ஏக்கர் பரப்பளவில் உயரிய ரகமான மிதுலா, விசால், கிரைன் உள்ளிட்ட தர்பூசணி வகைகளை கடந்த மாதங்களுக்கு முன்பு பயிரிட்டனர். இன்னும், 15 நாட்களில் பழங்கள் முழு வளர்ச்சியடைய இருந்ததால் அறுவடைக்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், சில நாட்களுக்கு முன் வானிலை மாற்றத்தின் காரணமாக இப்பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால், புதிய வகை வைரஸ் உருவாகி தர்பூசணி செடிகள் அழுகி கருகின. வைரஸை அழிக்க விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளின் ஆலோசனைபடி பல்வேறு மருந்துகள் தெளித்தும் எந்தவித பயனும் இல்லை.

நாளடைவில் அனைத்து தர்பூசணிகளும் அழுகிபோனது. பல லட்ச ரூபாய் செலவு செய்து பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்ட தர்பூசணிகள் அழுகி வீணாகி போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நிற்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி கொடி வகை பயிர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டுவர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

The post பல நூறு ஏக்கரில் பயிரிட்ட தர்பூசணி அழுகி வீணானது: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Seyyur ,Latur ,Dinakaran ,
× RELATED தடை செய்யுங்கள், ஜனநாயகத்தை...