×

ரூ.100 கோடி சொத்து போலி பத்திரப்பதிவு? அறப்போர் இயக்கம் மீது மான நஷ்ட வழக்கு: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ மகன் பேட்டி

நெல்லை: ரூ.100 கோடி சொத்தை போலி பத்திரப்பதிவு செய்ததாக என் மீதும், என் தந்தை மீதும் அவதூறு பரப்பும் அறப்போர் இயக்கம் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வோம் என நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவின் மகன் நயினார் பாலாஜி தெரிவித்து உள்ளார். நெல்லை தொகுதி பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி நேற்று நெல்லையில் அளித்த பேட்டி: சென்னை ஆற்காடு சாலையில் ரூ.100 கோடி சொத்தை நானும், என் தந்தையும் போலி பத்திரப்பதிவு செய்ததாக அபாண்டமான குற்றச்சாட்டை அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. அந்த சொத்தின் சந்தை மதிப்பு ரூ.46 கோடி. அதை நாங்கள் சேல்ஸ் அக்ரிமென்ட் மட்டுமே போட்டுள்ளோம். இன்னமும் கிரைய பத்திரம் கூட போடவில்லை. நாங்கள் சேல்ஸ் அக்ரிமென்ட் போட்டு, ராதாபுரத்தில் சொத்தை பதிவு செய்துள்ளோம்.

இதில் எல்லாமே சட்டப்படி உள்ளது. ஒரு சார்பதிவாளர் அலுவலக எல்கைக்கு உட்பட்ட சொத்தை வேறொரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது என்னும் செக்‌ஷன் 28 சட்டம் 29-6-22ம் தேதி சர்க்குலராக வெளியானது. ஆனால் நாங்கள் 1-6-22ம் தேதியே சொத்தை பதிவு செய்துள்ளோம். எனவே என் மீதும், என் தந்தை மீதும் வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர். போலி பத்திரப்பதிவு செய்ததாக என் மீதும், என் தந்தை மீதும் அவதூறு பரப்பும் அறப்போர் இயக்கம் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வோம். அந்த இடத்தை வாங்க பலரும் முயற்சி செய்தனர். அவர்களும் எங்கள் மீது அவதூறு பரப்ப முயற்சிக்கின்றனர். நாங்கள் இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை சரக டிஐஜியிடமும், சென்னை மாவட்ட பதிவாளரிடமும் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ரூ.100 கோடி சொத்து போலி பத்திரப்பதிவு? அறப்போர் இயக்கம் மீது மான நஷ்ட வழக்கு: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ மகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Arapor Movement ,Nayanar Nagendran MLA ,Nellai ,Arrabor movement ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...