×

கூடுவாஞ்சேரி அருகே டாஸ்மாக் பார் ஊழியரை வெட்டிய 4 பேர் கைது

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த பாரில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (42) பார் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் மதுபானக் கடையிலேயே தங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு பாரில் இருந்த ராமச்சந்திரனிடம் கதவுக்கு வெளியே நின்றபடி மதுபானம் மற்றும் பணம் கேட்டு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று மிரட்டியுள்ளது. இதில் பணம் தர மறுத்ததால் அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் ராமச்சந்திரனை தலை, கால் என பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு கல்லாப்பெட்டியில் இருந்து ரூ.3 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடியது.

அவரது அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ராமச்சந்திரனை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில், இந்த வழக்கில் நேற்றுமுன் தினம் மாலை சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த தெல்லிமேடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் (24), ஆத்தூர் கணபதி நகரை சேர்ந்த கர்ணன் (34), வேங்கடபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (20), பாலூர் அடுத்த ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் (22) ஆகிய 4 பேரையும் கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கூடுவாஞ்சேரி அருகே டாஸ்மாக் பார் ஊழியரை வெட்டிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Kuduvancheri ,Pandur ,Puliyur ,Ramanathapuram district ,Thiruvadan ,Kuduvanchery ,Dinakaran ,
× RELATED கூடுதல் விலைக்கு மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் சஸ்பெண்ட்