×

காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்: அமைச்சர் மதிவேந்தன்

சென்னை: காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. NEELBO (Repellent) என்ற வேதிப்பொருளை பயன்படுத்தி வன விலங்குகள் விவசாய நிலங்களில் நுழைவதை தடுக்க திட்டமிடப் பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர்:
வனவிலங்குகளை பாதுகாப்பதற்காக எண்ணற்ற திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். அத்துடன், வனவிலங்குகளால் அவ்வப்போது விவசாயிகளுக்கும், விவசாய பயிர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவற்றை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆனையிட்டுள்ளார்.

காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. NEELBO (Repellent) என்ற வேதிப்பொருளை பயன்படுத்தி வன விலங்குகள் விவசாய நிலங்களில் நுழைவதை தடுக்க திட்டமிடப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத நடைமுறையாக முதல்வர் ஒவ்வொரு வருடமும் 10 கோடி ரூபாய் சிறப்பு நிதி (corpus fund) வழங்கி, வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அத்துடன், இந்த தொகையினை சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரின் சிறப்பு வங்கி கணக்கிற்கே செலுத்தி தாமதமின்றி நிவாரணம் கிடைக்க வழிவகை செய்துள்ளார்கள்.

வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு மற்றும் நிரந்தர ஊனமடைந்தருக்கும் நிவாரணத் தொகை ரூபாய் 4 லட்சமாக இருந்ததை, தற்போது முதல்வர் ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி ஆணையிட்டுள்ளார்கள். வனத்தீயினை கட்டுப்படுத்தும் பணியின் போது எதிர்பாராத விதமாக உயிரிழக்க நேரும் வனத்துறை பணியாளர்களுக்கு முதன் முறையாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வன உயிரினங்களால் தாக்கப்பட்டவர்களுக்கு 2021-2022ஆம் ஆண்டில் ரூ.3 கோடியே, 35 இலட்சமும், 2022-2023ஆம் ஆண்டில் ரூ.4 கோடியே, 13 இலட்சமும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2021-2022ஆம் ஆண்டில் வன உயிரினங்களால் ஏற்பட்ட வேளாண் பயிர், கால்நடை, உடைமை சேதங்களுக்கு ரூ.5 கோடியே, 91 இலட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் கடந்த இரண்டு ஆண்டுகளில் வன விலங்குகளால் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடாக ரூ.20 கோடியே, 22 இலட்சத்து, 54 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிராம அளவில் ஒரு எக்டேர் பரப்பளவில், வனம் சார்ந்த பலன்கள் கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் சிறுவனமே மரகத பூஞ்சோலை எனப்படும். இந்த திட்டத்தின் கீழ் 100 கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்படும். இந்த திட்டமானது 25 கோடி மதிப்பில் செயல் படுத்தப்படும். (ஒரு கிராமத்திற்கு 25 இலட்சம் வீதம்)

ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களின் தேவைகளுக்காக அந்நிய தாவரங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு வனப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டன. இந்த தாவரங்கள் உள்ளூர் தாவரங்களின் வளர்ச்சிக்கும், பல்லுயிர் பாதுகாப்பிற்கும் இடையூறாக இருக்கின்றன. அத்தகைய அந்நிய தாவரங்களை அகற்றும் பணி வனத்துறையால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த அந்நிய தாவரங்களில் விரைவில் பரவும் தன்மை கொண்ட நான்கு தாவரங்களான சீமைக்கருவேல்(Prosopis), உண்ணிச்செடி(Lantana), சீமைக் கொன்னை(Senna) மற்றும் சீகை மரம்(Wattle) ஆகியவற்றை வனங்களில் இருந்து முற்றிலும் அகற்றுவதற்கும் அப்பகுதிகளில் உள்ளூர் வனவளத்தை மீட்பதற்கும் இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழ்நாட்டில் புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-2022ஆம் ஆண்டில் பல்வேறு திட்டங்களின் மூலம் (CAMPA, GTM, NABARD, SADP) ரூ. 21 கோடியே 87 இலட்சம் செலவில் 3,428 எக்டேர் பரப்பில் அந்நிய தாவரங்கள் அகற்றப் பட்டுள்ளன.

உலகப்புகழ் பெற்ற தாவரவியல் பூங்காவான இங்கிலாந்தில் உள்ள Kew Garden னின் ஒத்துழைப்போடு உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் 350 ஏக்கர் பரப்பளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடம்பூரில் நிறுவப்பட உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் 3 கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

3700 எக்டேர் நிலப் பரப்பில் ரப்பர் மரங்களை கொண்டு இயங்கி வரும் அரசு ரப்பர் கழகம் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ரப்பர் பால்(Liquid Rubber) மிகவும் தரம் வாய்ந்ததாகும். இருப்பினும் ரப்பர் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டபோதும், இந்நிறுவனம் கடந்த 2022-2023ஆம் ஆண்டில் ரூபாய் 32.67 இலட்சம் லாபம் ஈட்டியுள்ளது. அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களுக்கு 2019ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த ஊதிய உயர்வு, நமது கழக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, 2022-2023ஆம் ஆண்டில் ரூபாய் 2 கோடியே, 40 இலட்சம் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு வனத்தோட்டக் கழகமானது டாக்டர் கலைஞரால் 1974ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனுடைய முக்கியப் பணியானது காகிதம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு காகிதக்கூழ் மரமான யுகலிப்டஸ் மரங்களை வளர்த்து வழங்குவதும் மற்றும் முந்திரி தோட்டங்களை பராமரிப்பதும் ஆகும். இந்நிறுவனம் கடந்த 2021-2022ஆம் ஆண்டு ரூபாய் 28.5 கோடி இலாபம் ஈட்டிய நிலையில், நடப்பாண்டு ரூபாய் 47.80 கோடி இலாபம் ஈட்டி உள்ளது.

1976ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் ஆகும். இக்கழகத்தில், தற்போது 3700 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். TANTEAயின் வசம் தற்போது 3,990 எக்டேர் தேயிலை தோட்டங்கள் உள்ளன. TANTEAயினை நிரந்தர இலாபம் ஈட்டக்கூடிய நிறுவனமாக மேம்படுத்துவதற்கு Earnest and Young என்ற ஆலோசனை நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நமது முதலமைச்சரின் தலைமையிலான நமது கழக அரசு பொறுப்பேற்ற பின்பு TANTEA-ல் இருந்து ஓய்வுபெற்ற தொழிலாளர் களுக்கு பணிக்கொடை வழங்குவதற்கும், விடுப்பு சம்பளம், மருத்துவ விடுப்பு சம்பளம் வழங்குவதற்கும் என மொத்தம் ரூபாய் 29.38 கோடி வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 677 ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களுக்கு ரூபாய் 13.46 கோடியில் வீடுகட்டும் பணிகள் மேற் கொள்ளப்பட்டுவருகின்றன.

பழங்குடியினர் வாழும் கிராமப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கச்சா வீடுகள், பள்ளி மேம்பாடு, சாலை மேம்பாடு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்துடன், வனத்துறையில் பழங்குடியின வகுப்பை சார்ந்த தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு (Anti Poaching Watcher), வனக்காவலர் பதவி உயர்வில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் (TBGPCCR) திட்டத்தின் கீழ், 2022-2023ஆம் ஆண்டிற்கு ரூபாய் 104.10 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மனித யானை முரண்பாடுகளை தடுக்க 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு யானை புகா அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சூழல் பாதுகாப்பு பசுமைப் பணிக்கென 68.40 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. வனப்பாதுகாப்பு சட்டம் 1980க்கு முன்னர் வனப்பகுதியில் சாலை போடப்பட்டிருந்தால் அதனை சாலையின் அனுமதிக்கப்பட்ட அளவுகள் மற்றும் தன்மை மாறாமல் பராமரிக்கலாம். புதியதாக வனப்பகுதியை சாலைகள் அமைக்கவோ அல்லது வேறு வனம் சாராத தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டிய தேவையிருப்பின் ஒன்றிய அரசின் பரிவேஸ் போர்ட்டல் (Pro Active Responsive facilitation by Interactive and Virtuous Environmental Single window Hub) மூலம் User Agency வாயிலாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.

வனத்துறையின் வரலாற்றிலேயே முதன்முறையாக வனப்பாதுகாப்பு, பசுமை பரப்பை அதிகரித்தல், வன மேலாண்மையில் பழங்குடியினரின் பங்கு, மனித விலங்கு மோதல்களை தடுப்பது போன்றவற்றிற்காக தேவையான கொள்கை மாற்றங்களை பரிந்துரைப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணி அலுவலர் தலைமையில் வன ஆணையத்தை அமைத்துள்ளார்கள்.

வனத்துறையில் பதவி உயர்வு
தமிழ்நாடு வனத்துறையில் பணிபுரியும் பல்வேறு நிலைகளில் உள்ள பணியாளர்களின் பதவி உயர்வுகள் 2018ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த நிலையில், நம் கழக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 858 வனத்துறை பணியாளர்களுக்கு, 26 நிலைகளில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை இப்பேரவையில் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

The post காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்: அமைச்சர் மதிவேந்தன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mathivendan ,Chennai ,NEELBO ,Madhivendan ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்