×

பறவையியல் ஆய்வை மேற்கொள்ள ரூ. 25 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம்: அமைச்சர் மதிவேந்தன்

சென்னை: பறவையியல் ஆய்வை மேற்கொள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்பட உள்ளது. நமது மாநிலத்தில் 15 பறவைகள் சரணாலயங்கள் இருந்தன. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் கழுவேலி சரணாலயமும், திருப்பூர் மாவட்டத்தில் நஞ்சராயன்குளம் சரணாலயமும் கூடுதலாக நமது ஆட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர்:
தமிழ்நாட்டில் தற்போது அமராவதி அணை, சாத்தனூர் அணை மற்றும் ஒகேனக்கல் ஆகிய 3 இடங்களில் முதலைப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. முதலைகள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வரும்பொழுது அவற்றை அப்புறப்படுத்தி அந்த முதலைப் பண்ணைகளில் பராமரிக்கப்படுகின்றன.

கடல் சூழலின் துப்புரவாளன் என்று அழைக்கப்படும் ஆமைகளை பாதுகாப்பது கடல் சூழலை பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கியப் பணியாகும். தமிழ்நாட்டில் சித்தாமை(Olive ridley), பச்சை ஆமை(Green sea turtle), தோணியாமை(Leatherback sea turtle), அலுங்காமை(Hawksbill sea turtle) மற்றும் பெருந்தலை ஆமை(Loggerhead sea turtle) போன்ற ஐந்து வகையான கடல் ஆமைகள் உள்ளன. இவற்றில் சித்தாமைகள் தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. இந்த அரியவகை ஆமைகளை பாதுகாப்பதற்காக சென்னை, கிண்டியில் சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க ரூ.6.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக, நமது மாநிலத்தில் கடல்பசு என்று சொல்லப்படுகின்ற ஆவுலியாவை பாதுகாக்க, அதன் கடலோர வாழ்விடமான பாக் ஜல சந்தி பகுதியில் “கடற் பசு பாதுகாப்பகம்” அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கடல் அரிப்பை தடுக்கவும், கடல் மாசுபாட்டை குறைக்கவும், கடல் வாழ் உயிரின பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கவும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற திட்டம் ரூபாய் இரண்டாயிரம் கோடியில் உலக வங்கியின் நிதியுதவியுடன் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் 193 எக்டேர் பரப்பில் 250க்கும் மேற்பட்ட அரிய பறவையினங்களும், பல்லுயிர்களும் பாதுகாக்கப் படும் வகையில் தமிழ்நாட்டின் முதல் பாரம்பரிய பல்லுயிர் தளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல்வாழ் உயிரினங்களான பவளப்பாறை(Corals), கடல் அட்டை(Sea cucumber), கடல் குதிரை(Sea Horse) போன்றவற்றின் கடத்தல் உள்ளிட்ட கடல்வாழ் வன உயிரின குற்றங்களைத் தடுப்பதற்கென சிறப்பு கடல்சார் உயர் இலக்குப் படை (Marine Elite Force) உருவாக்கப்பட்டு, 10 வேட்டை தடுப்புக் காவலர்கள் மற்றும் 2 படகோட்டிகள் பணியமர்த்தப் பட்டுள்ளார்கள்.

தற்போதைய நவீனகால, கள சவால்களை கையாள்வதற்கு, நவீன தொழில் நுட்பங்கள் கொண்டு வனத்துறையின் வனமேலாண்மை மற்றும் வன உயிரின மேலாண்மையை நவீனப்படுத்துவதற்கு (Modernization of Forest Force) ரூ. 53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதன் முறையாக வனம் மற்றும் வன உயிரின குற்றங்களை தடுப்பதற்காக (Tamil Nadu Forest Wildlife Crime Control Bureau) சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் இராமநாதபுரம் ஆகிய நான்கு இடங்களில் 85 பணியாளர்கள் அடங்கிய வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

The post பறவையியல் ஆய்வை மேற்கொள்ள ரூ. 25 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம்: அமைச்சர் மதிவேந்தன் appeared first on Dinakaran.

Tags : International Bird Center ,Minister ,Madivendan ,CHENNAI ,Villupuram district ,international ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...