×

பஞ்சாப் துப்பாக்கி சூட்டில் பலியான 2 தமிழக வீரர்கள் உடல் இன்று மாலை சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது

சேலம்: பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள நங்கவள்ளி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வனவாசி பனங்காடு சாணார்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி மகன் கமலேஷ் (24) என்பது தெரியவந்துள்ளது. கமலேஷ் தற்போது பதின்டா ராணுவ முகாமில் பணி புரிந்து வந்தார். நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்து விட்டதாக, அவரது தந்தை ரவிக்கு நேற்று மாலை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு ரவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். ரவி, பனங்காடு திமுக கிளை செயலாளராக உள்ளார்.

இவரது உடல் இன்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, அவர்களது தோட்டத்திலேயே உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தேனி
தேனி மாவட்டம், தேவாரம் தே.மூணாண்டிபட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி ரத்தினம். இவர்களது மகன் யோகேஷ்குமார் (21). இவர், கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவ பயிற்சிகளை முடித்துவிட்டு பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ராணுவ முகாமில் இருந்து நேற்று யோகேஷ்குமாரின் பெற்றோருக்கு அழைப்பு வந்தது. போனில் பேசியவர்கள், யோகேஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி துடித்துள்ளனர். இந்த நிலையில், இறந்த யோகேஷ்குமார், உடல் இன்று சொந்த ஊரான, தேவாரம் மூணாண்டிபட்டிக்கு கொண்டு வரப்பட உள்ளது.

தந்தை உருக்கம்
என் மகன் பத்தாம் வகுப்பு முடித்ததில் இருந்தே, இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன் நண்பர்களுடன் சேர்ந்து உள்ளூரில் பயிற்சி பெற்று வந்தார். என் ஒரே மகனை இழந்து விட்டேனே எனக் கூறி யோகேஷ்குமாரின் தந்தை ஜெயராஜ் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post பஞ்சாப் துப்பாக்கி சூட்டில் பலியான 2 தமிழக வீரர்கள் உடல் இன்று மாலை சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Punjab ,Salem ,Bathinda, Punjab ,Nadu ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...