×

மிடில் ஓவர்களில் அதிக `டாட் பால்’ தான் தோல்விக்கு காரணம்: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி

சென்னை: 16வது ஐபிஎல் தொடரில், சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்த 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில், 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 52 (36பந்து), தேவ்தத் படிக்கல் 38, அஸ்வின் 30, ஹெட்மயர் நாட் அவுட்டாக 30 ரன் அடித்தனர். சென்னை பவுலிங்கில் ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய சென்னை அணியில், ருதுராஜ் 8 ரன்னில் வெளியேற ரகானே 31, ஷிவம் துபே 8, மொயின் அலி 7, ராயுடு ஒரு ரன்னில் அவுட் ஆகினர். அதிகபட்சமாக டெவோன் கான்வே 50 ரன் எடுத்து கேட்ச் ஆனார். கடைசி கட்டத்தில் டோனி (32 ரன், 17 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), ஜடேஜா (25 ரன், 15 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) போராடினர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. சென்னை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களே எடுத்தது. இதனால் 3 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் த்ரில் வெற்றிபெற்றது. ராஜஸ்தான் பவுலிங்கில் அஸ்வின், சாஹல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அஸ்வின் ஆட்டநாயகன் விருது பெற்றார். 4வது போட்டியில் 3 வது வெற்றி பெற்ற ராஜஸ்தான் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. சென்னை 2வது தோல்வியை சந்தித்தது.

வெற்றிக்கு பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், எங்கள் பவுலர்கள் நெருக்கடியான சமயத்தில் கூலாக செயல்பட்டு நன்றாக பந்து வீசினர். சேப்பாக்கத்தில் நாங்கள் ஒரு முறை கூட வெற்றி பெற்றது கிடையாது. இதனால் இன்று வெல்ல வேண்டும் என நினைத்தோம். பவர் பிளேவில் ருதுராஜ் விக்கெட் எடுத்தது சாதகமாக அமைந்தது. கடைசி 2 ஓவர் கடும் நெருக்கடியாக இருந்தது. ஏனென்றால் டோனி களத்தில் இருக்கும் போது எப்போதுமே எதிரணிக்கு ஆபத்துதான். தனி ஆளாக டோனியால் என்ன செய்ய முடியும் என்று அனைவருக்கும் தெரியும். அவருக்கு எதிராக எந்த திட்டத்தை வகுத்தாலும் அது வேலைக்கு ஆகாது, என்றார்.

தோல்வி குறித்து டோனி பேசுகையில், “பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. மிடில் ஓவர்களில் அதிக டாட்பால் ஆடிவிட்டோம். சிங்கிள் அதிகம் எடுத்திருக்க வேண்டும். தோல்விக்கு பேட்டிங்கில் சொதப்பியதே காரணம். இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். தோற்றாலும் வெற்றி இலக்கிற்கு மிக அருகே வரை வந்தது மகிழ்ச்சி. பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்றிருந்தால் அது நிச்சயம் ரன் ரேட்டை பாதித்திருக்கும். தொடரின் கடைசி கட்டத்தில் ரன் ரேட் மிக அவசியமானதாக இருக்கும். இது எனக்கு கேப்டனாக 200வது போட்டி என்பதே தெரியாது. இறைவனுக்கு நன்றி. தனிப்பட்ட சாதனைகள் பற்றி எனக்கு பெரிய அக்கறை கிடையாது. 199வது போட்டிக்கும் 200வது போட்டிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எப்படி விளையாடுகிறோம் என்பதே எனக்கு முக்கியம்”, என்றார்.

என் பலத்தை என்னை விட யார் நன்றாக உணர முடியும்
ஆட்டநாயகன் விருது பெற்ற அஸ்வின் கூறுகையில், “இந்த விருது எனக்கு கிடைத்ததால் பலரும் ஆச்சரியப்பட்டு இருப்பார்கள். எப்போதும் முதல் விக்கெட்டில் இருந்தே பேட்டிங் செய்ய தயாராக அமர்ந்திருப்பேன். இது ஈசி இல்லை என்றாலும், எனக்கு நானே இதை நல்ல விதமாக உணர்கிறேன். ஏனெனில் என்னுடைய பலத்தை என்னை விட யார் நன்றாக உணர முடியும். இன்று சஞ்சு சாம்சன் ஆவுட் ஆன உடன் நிதானமாக விளையாடுவதற்கு நான் சரியாக இருப்பேன் என்று இறக்கினர். டெஸ்ட் போட்டியை விளையாடிய பிறகு நல்ல பார்மில் ஐபிஎல் போட்டிகளுக்கு வந்தேன். இதனால், எனது பவுலிங்கில் பந்தை நன்றாக டர்ன் செய்ய முடிந்தது, நல்ல சுழற்சி கொடுக்க முடிந்தது. போட்டியில் தோற்கிறோமோ, ஜெயிக்கிறோமோ.. அதில் முடிவு நான் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும், என்றார்.

ஒயிட் யார்க்கரால் வெற்றி!
இப்போட்டியில் கடைசி ஓவரை வீசிய ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா கூறுகையில், “கடைசி ஓவரில் யார்க்கர்களை வீச வேண்டும் என்பதை மட்டும்தான் மனதில் வைத்து செயல்பட்டேன். வலைப்பயிற்சியின்போது நான் யார்க்கர்களை வீசிதான் பயிற்சி செய்தேன். லெக் சைட் பவுண்டரி பெரியதாக இருந்ததால், பேடிற்கு நேராக யார்க்கர் வீச முற்பட்டேன். ஆனால், அது லோ புல்டாசாக மாறி 2 சிக்ஸர்கள் சென்றது. அதன்பிறகு லைனை மாற்றி, ஒயிட் யார்க்கர் வீசினேன். அதனால்தான், வெற்றிபெற முடிந்தது’’ என்றார்.

டோனி காயம்; சிஎஸ்கே விளக்கம்
சென்னை-ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதிய போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் வர்ணனை செய்தார். போட்டி முடிந்தப் பிறகு அவர் கூறுகையில் “டோனி இப்போட்டியில் இயல்பாக விளையாடவில்லை. எப்போதுமே, ரன் எடுக்க அதிவேகமாக ஓடும் இவர், இன்று ஓடவே சற்று சிரமப்பட்டார். இது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என நான் கருதுகிறேன். மருத்துவ குழு அவரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர் இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாட ஆர்வமாக இருப்பதால்தான், காயத்தை கூட பொருட்படுத்தாமல் விளையாடுகிறார்’’ என்றார். இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகத்தில் விசாரித்தபோது, “டோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அது பெரிய காயம் கிடையாது. டோனி அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என உறுதியுடன் இருக்கிறார். அவர் நிச்சயம் விளையாடுவார். மருத்துவ அறிக்கை விரைவில் வெளியாகும்’’ என தெரிவித்தனர்.

The post மிடில் ஓவர்களில் அதிக `டாட் பால்’ தான் தோல்விக்கு காரணம்: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி appeared first on Dinakaran.

Tags : CSK ,Tony Petty ,Chennai ,16th IPL series ,Chennai Super Kings ,Rajasthan Royals ,17th league ,Chepauk.… ,Tony Baty ,Dinakaran ,
× RELATED கேப்டன் ருதுராஜ் அரை சதம் வீண்: சிஎஸ்கேவை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்