×

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பெரியகுளம் கண்மாய் தூர்வாரும் பணிகள் ‘படு ஸ்பீடு’

பெரியகுளம்: தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. இங்கு நெல், பயிர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையின் வரிசையில் ஏலம், மிளகு, காபி, ஆரஞ்சு, மா, சப்போட்டா, கொய்யா, இலவு விவசாயம் நடக்கிறது.விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன. இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார். இதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றியத்திலும் ரூ.பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் வேளாண்துறை மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

குறிப்பாக விவசாயிகளின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய தடுப்பணை, நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். பெரியகுளம் சோத்துப்பாறை அணை செல்லும் சாலையில் அமைந்துள்ளது பெரியகுளம் கண்மாய். புராண காலத்திலிருந்து பெரியகுளம் கண்மாய்க்கு தனி வரலாறு உண்டு. தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் தனக்கு குழந்தை வரம் வேண்டி பெரியகுளம் வராக நிதிக் கரையில் தவம் இருந்ததாகவும், தவத்தின் பிரதிபலனாக அவருக்கு ஆண் குழந்தை பெறவே, வராக நதி தெற்கு கரையில் பாலசுப்பிரமணிய சுவாமி ேகாயில் உருவாக்கப்பட்டதாகவும், கோயில் கட்டுமான பணிகளுக்காகவும், பக்தர்களின் வசதிக்காகவும் பெரியகுளம் கண்மாய் வெட்டப்பட்டதாக புராணங்கள், இதிகாசங்கள் கூறுகின்றன. சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்யும் காலங்களில் வரும் நீர்வரத்தானது ஓடையின் வழியாக பெரியகுளம் கண்மாயை வந்தடைகிறது. கண்மாய் நீரினை நம்பி 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பட்டு வருவதோடு அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், கண்மாய் முழுவதும் ஆகாயத் தாமரைகள் படர்ந்து கரைகள் சேதம் அடைந்து காணப்பட்டதால் விவசாயிகள் மற்றும் நீரினை பயன்படுத்துவோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில் கண்மாயை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி கால்வாய்கள் அமைக்க வேண்டும் என பெரியகுளம் பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தமிழக அரசு பொதுப்பணித்துறை மூலம் ரூ.80 லட்சம் செலவில் தூர்வாரும் பணியும், கரை பலப்படுத்தும் பணிகளும் கால்வாய்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பணிகளை மேற்கொண்டதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றித் தந்த தமிழக அரசிற்கும் பொதுப்பணி துறையினருக்கும் பொதுமக்கள் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் பெரியகுளம் கண்மாய் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட வேண்டும் எனவும், கண்மாய்க்கு முழு கொள்ளளவுள்ள நீரினை தேக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கரைப்பகுதியில் சோத்துப்பாறை சாலையில் இருந்து தென்கரை பேரூராட்சி வரை சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் தென்கரை, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, கைலாச பட்டி, சரத்துப்பட்டி மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள், விவசாயிகள், சோத்துப்பாறை, கோவில்காடு ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் கூலித் தொழிலாளர்கள் மிகுந்த பயனடைவார்கள் என தெரிவித்துள்ளனர். அதுபோல், கரை சரியில்லாத காரணத்தினால் பெரியகுளம் மார்க்கெட் வீதி வழியாக செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் காலவிரயமும் ஏற்படுகிறது. எனவே, கண்மாய் கரைப்பகுதிகளில் தார்ச்சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் பெரியகுளம் பகுதி பொதுமக்கள் சோத்துப்பாறை அணையின் பிரதான சாலையை பயன்படுத்துவதால் டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்கள் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாவதாக தகவல் எழுந்துள்ளது. எனவே, குளக்கரையில் சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தால் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு உகந்ததாக இருக்கும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

The post விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பெரியகுளம் கண்மாய் தூர்வாரும் பணிகள் ‘படு ஸ்பீடு’ appeared first on Dinakaran.

Tags : Periyakulam Kanmai ,Periyakulam ,Tamil Nadu ,Kerala ,Theni district ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி