×

துணையாக வருவான் பனையடியான் சாமி

திருவானைக்காவல், திருச்சி

நம்ம ஊரு சாமி

உறையூரில் ஆட்சி புரிந்த சோழ மன்னனிடம் ஆதி ராசுப்பிள்ளை என்பவர் கணக்கு பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஏழு புதல்வர்களும் ராசாத்தி என்ற ஒரு மகளும் இருந்தனர். படைத்த பிரம்மனே தன் படைப்பில் பெருமை கொள்ளும் அளவுக்கு பேரழகை கொண்டவள் ராசாத்தி. திருக்கார்த்திகை நாளன்று ராசாத்தி வீடு இருக்கும் வீதியில் சின்னஞ் சிறார்களும், பருவம் வந்த கன்னியர்களும் அவரவர் வீட்டு மாடத்திலும், வாசற்படியிலும், வீட்டுத் திண்ணைகளிலும் விளக்கேற்றி வைத்துக் கொண்டிருந்தனர்.

ராசாத்தியும் தனது வீட்டு திண்ணையில் விளக்கேற்றி வைத்தாள். விளக்கின் வெளிச்சத்திலும், பௌர்ணமி நிலவின் ஒளியிலும் தேவதையாக தெரிந்த ராசாத்தியை, அவ்வழியே வலம் வந்த சோழ மன்னன் கண்டு, அவள் அழகில் மயங்கினான். அவளை திருமணம் செய்ய விரும்பினான். அதை ஆதிராசுப்பிள்ளையிடம் மறுநாள் தெரிவித்தான். மன்னனிடம் மறு பௌர்ணமியில் மகளை மணமுடித்து தருவதாக வாக்குறுதி அளித்தார் ஆதி ராசுப்பிள்ளை. பௌர்ணமி நெருங்கியது.

இன்னும் 3 தினங்களே பௌர்ணமிக்கு இருந்த நாளில் மன்னனிடமிருந்து தன் மகளைக் காப்பாற்ற எண்ணி, தன் மகள் மற்றும் ஏழு புதல்வர்களுடன் அன்றிரவு, இரவோடு இரவாக ஊரைவிட்டு சென்றனர். இதனை அறிந்த மன்னன் தன் படைகளுடன் அவர்களை துரத்தினான். ஏழு அண்ணன்களில் தெய்வ பக்தியும், முரட்டுத் தனம் இல்லாமலும் குழந்தை மனமும் கொண்ட கடைசி அண்ணனை கையில் பிடித்த படியே ஓடினாள் ராசாத்தி.

ஓட முடியாமல் தெவங்கி அவதிப்பட்டு கண்ணீரோடு தங்கையின் முகம் பார்த்த அண்ணனின் கண்ணீரை துடைத்த ராசாத்தி, தன்னால் தானே தம்மை பெற்றவர்களுக்கும், உடன் பிறந்தவர்களுக்கும் இந்த நிலைமை என்றெண்ணி, தங்கள் அன்றாடம் வழிபடும் காமாட்சி அம்மனையும், சமயபுரத்தாளையும் மனமுருக வேண்டிக்கொண்டு அப்பகுதியில் இருந்த சோளக் குழியில் குதித்தாள்.

உயிர் பிரிவதற்கு முன் தன்னிடமிருந்த பட்டு சேலையை தன் சகோதரர்களிடம் கொடுத்தாள். ‘‘அண்ணேன், நீ ஓடு, உன் கூட என் ஆத்மா வரும், உன்னால எப்ப முடியலயோ அப்போ அம்மான்னு கூப்பிடு, காமாட்சி அம்மா வருவா, கண்டிப்பா வருவா, உன்ன காப்பாத்துவா. ’’ என்றபடி தன் இன்னுயிரை மாய்த்தாள். மகள் மாண்டு போனதை அறிந்தும் ஓட முடியாமல் ஓடி ஏழுபுதல்வர்களுடன் காவிரி கரையை வந்தடைந்த ஆதி ராசுப்பிள்ளை, காவிரியில் கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் குதித்தார்.

அனைவரும் வெள்ளத்தில் குதித்து நீந்தி கரை சேர முயன்றனர். ஆதி ராசுப்பிள்ளை நீந்தி காவிரியின் வட கரையான திருவானைக்காவலை அடைய புதல்வர்கள் ஆறு பேரும் தனித் தனியே பிரிந்து வெவ்வேறு இடங்களில் கரையேறினர். இன்னொரு மகனால் நீந்தி வட கரை செல்ல இயலவில்லை.
அவர் அனுதினமும் வணங்கி வந்த அன்னை காமாட்சியை வேண்டியபடியே வெள்ளத்தில் நீந்தினார். தத்தளித்து நீரில் மூழ்கும் நிலையில் தங்கை கூறியது நினைவுக்கு வர, ‘‘அம்மா, காமாட்சி, அம்மா சமயபுரத்தா’’ என்றபடி கத்தினார்.

அன்னை ஆதிசக்தி அருளால் ஆற்று வெள்ளத்தில் பனை மரம் ஒன்று மிதந்து வந்தது. தங்கை ராசாத்தி கொடுத்த சேலையை அந்த பனை மரத்தின் மீது வீச, அந்த சேலை பனை மரத்தின் மீது விழுந்து படர்ந்தது. அதன் மூலம் மரத்தை தன் பக்கமாக இழுத்து அந்த மரத்தை பிடித்துக் கொண்டார். வெள்ள ஓட்டத்தின் வழியே வந்து திருவானைக்காவலில் அவர் கரையேறினார். பனைமரமும், கரை ஒதுங்கியது. பனை மரத்தில் சுற்றப்பட்ட அந்த சேலையை எடுத்து ஆலயத்தில் ஓர் இடத்தில் புதைத்து விட்டு மார்க்கமுடைய அய்யனாரை மனமுருக வேண்டினார்.

தன் குடும்பம் சிதைவுண்டு போனதை எண்ணி வருந்தினார். தங்கை ராசாத்தி கண்முன்னே மாண்டு போனதை நினைத்து உருகியபடியே உயிரை மாய்க்கப் போனார். அவரை மார்க்கமுடைய அய்யனார் ஆட்கொண்டார். பனையடியாருக்கு வெல்லும் வரம், கொல்லும் வரம், வேண்டி வருபவருக்கு வேதனைகளை தீர்க்கும் வரம் என வரங்கள் பல கொடுத்து தன்னெதிரே நிலையம் கொடுத்தார் அய்யனார். பனை மரத்துணையோடு வந்ததால் பனைமரத்தடியான் என அழைக்கப்பட்டார்.

மார்க்கமுடைய அய்யனாருக்கு எதிரே ஒரு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பனையடி ஆண்டவர் என்ற பெயரில் பொது மக்களும் குல மக்களும் இன்றும் அவரை ஆராதனை செய்து வணங்கி வருகின்றனர். தன் குடும்பத்துக்கு நேர்ந்தது போன்று வேறு எவருக்கும் இதுபோன்று நிகழக்கூடாது என்பதற்காக, துயரம், எதிரிகள் தொல்லை, நிலப்பிரச்னை என தன்னிடம் வருபவர்களை காத்து அருள்கிறார் இந்த பனையடியார். கருவறையில் மார்க்கமுடைய அய்யனார் அமர்ந்த கோலத்தில் அருட்பாலிக்கிறார். எதிரே பனையடியான் நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறார்.

ஆலயத்தின் எதிரே யானை, குதிரை சிலைகள் கம்பீரமாக நிற்கின்றன. ஆலயத்தின் தல விருட்சமான மகிழ மரம் வடக்கு திருச்சுற்றிலும் இன்னொரு தல விருட்சமான பனை மரம் கிழக்கு திருச்சுற்றிலும் உள்ளன. இங்குள்ள பனை மரத்திற்கு பக்தர்கள் வஸ்திரம் சாத்தி, பனையடியாரை காப்பாற்றியதுபோல் எம்மையும் காப்பாற்றுங்கள் என வேண்டிக் கொள்கின்றனர். மார்க்கமுடைய அய்யனார் கோயிலை உருவாக்கியவர் கரிகால் வளவன் என்ற சோழ மன்னன்.

திருச்சி காவிரியில் மழைக்காலங்களில் வெள்ளம் கரைபுரண்டோடும். மற்ற காலங்களில் தேவைக்கு கூட தண்ணீரின்றி போகும். திருவானைக்காவலில் இருந்து கும்பகோணம் வரை உள்ள நஞ்சை நிலங்கள் நீரின்றி பயிர்கள் கருகிப் போகும். இதனை போக்கவும், நீரினை தேக்கவும் முடிவு செய்தான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நேரங்களில் காவிரியின் வடகரையில் உடைப்பு ஏற்படாதவாறு இருக்க அப்பகுதியில் ஒரு அய்யனார் சிலையை நிறுவ எண்ணினான்.

அதன்படியே காவிரியின் வடகரையில் திருவானைக்காவலில் ஒரு அய்யனார் சிலையை பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்தான். காவிரியின் இரு கரைகளையும் உயர்த்தினான். அதன்பின் வெள்ளம் வீணாகாமல் கால்வாய் வழியே பயிர்களுக்கு பாய்ந்து காவிரியை ஒட்டி உள்ள பகுதிகளை செழிப்பாக்கியது. வெள்ள சேதத்தை தவிர்க்க நல்லதொரு மார்க்கம் அமைத்து தந்த இந்த அய்யனார் மார்க்கமுடைய அய்யனார் என அழைக்கப்பட்டார்.

திருச்சியைச் சுற்றி உள்ள பகுதிகளான மண்ணச்சநல்லூர், உறையூர், திருவரங்கம், பாலக்கரை, தில்லைநகர் போன்ற இடங்களிலும் தேனியை சுற்றி உள்ள வீரபாண்டி, அல்லி நகரம் உப்பார்ப்பட்டி, கூளையனூர், கம்பம், பெரியகுளம் முதலிய ஊர்களிலும் மற்றும் பிற மாவட்டங்களிலும் உள்ள பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு இந்த மார்க்கமுடைய அய்யனாரே குல தெய்வம்.

மார்க்கமுடைய அய்யனார் கோயிலில் பரிவார தெய்வங்களாக பாவாடைசாமி, உச்சிமலை கருப்பு, சங்கிலி கருப்பு, காரைக்கால் அம்மையார், சந்தன கருப்பு, மணப்பாறை மாமுண்டி, பேச்சியம்மன், அகோர வீரபத்திரர், இருளப்பன், சப்பாணி கருப்பு, பெரிய கருப்பு, மலையாள கருப்பு, பெரியண்ணசாமி ஆகியோர் நிலையம் கொண்டுள்ளனர்.

தன்னை நாடி வரும் அனைத்து தரப்பு மக்களின் குறைகளை நீக்கி அவர்களுக்கு நல் மார்க்கத்தைக் காட்டி வழி நடத்துவதில் மார்க்கமுடைய அய்யனாருக்கு நிகரில்லை என்பது நிஜமே! திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள கல்லணை செல்லும் சாலையில் உள்ளது மார்க்கமுடைய அய்யனார் மற்றும் பனையடியான் கோயில்.

தொகுப்பு: சு. இளம் கலைமாறன்

The post துணையாக வருவான் பனையடியான் சாமி appeared first on Dinakaran.

Tags : Panayedian Sami ,Thiruvanaikaval ,Tiruchi ,Uru Sami Adi Rasupillai ,Chola ,Varayur ,
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு