×

இந்தோனேசியா மற்றும் அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்

கேம்ப்பெல் பே: இந்தோனேசியா மற்றும் அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்த தனிம்பார் தீவு பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

இந்த, மித அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 70.2 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. தனிம்பார் தீவு பகுதிகள் 65-க்கும் மேற்பட்ட தீவு கூட்டங்களை உள்ளடக்கியது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

இந்த நிலையில், அந்தமான் நிகோபார் தீவில், கேம்ப்பெல் பே என்ற இடத்தில் இன்று காலை 8.40 மணியளவில் மித அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 60 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

பீகாரின் அராரியா நகரில் நேற்று காலை 5.30 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் இருந்து தென்மேற்கே 140 கி.மீ. தொலைவில் உணரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஜம்மு மற்றும் காஷ்மீரில் நேற்று காலை 10 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது. கடந்த 9-ம் தேதி அந்தமான் நிகோபர் தீவில் இதேபோன்று மித அளவிலான நிலநடுக்கம் மாலை 4 மணியளவில் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.

The post இந்தோனேசியா மற்றும் அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் appeared first on Dinakaran.

Tags : Indonesia ,Andaman Nicobar Island ,Campbell Bay ,Nicobar Island ,Andaman ,Malayuku ,Dinakaran ,
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை