×

ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட, அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்வு!

பல்லாவரம்: ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட, அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் ஆசிரியர், மாணவர்கள் வெளிநாடு செல்லவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் விதமாக ‘ராக்கெட் சைன்ஸ்’ என்ற இணையவழி பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள, 56 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 500 மாணவர்கள் பங்கேற்றனர். இரண்டாம் கட்டபயிற்சிக்கு 220 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் 130 மாணவர்கள் மூன்றாம் கட்ட பயிற்சிக்கு தேர்வாகியுள்ளார். நிறைவாக 50 பேர் தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் ஜூன் மாதம் ரஷ்யா நாட்டில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தாம்பரம் மாநகராட்சி, ஜமீன் பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ரோஹித், லத்தாஷா ராஜ்குமார், இலக்கியா, முகமது சாதிக், ரக் ஷித் ஆகிய 5 பேரும் அடங்குவர். இதில், ரோஹித் முதலிடம் பிடித்துள்ளார்.

இதற்காக உழைத்த ஆசிரியை விஜயலட்சுமியை எம்எல்ஏ இ.கருணாநிதி உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். இதில் சிறார் திரைப்பட மன்றப் போட்டியில் ஜமீன் பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் லத்தாஷா ராஜ்குமார், சோழிங்கநல்லூர் அரசு பள்ளிமாணவர் ஆர்.ராகுல் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் குரோம்பேட்டை அரசு பள்ளி மாணவர் ஏ. யுவாஷ், பல்லாவரம் மறைமலை அடிகளார் பள்ளி மாணவி கே.ராஜலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த 4 மாணவர்களும் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மேலும், வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு வேடவாக்கம் பள்ளிஆசிரியர் டி.சேகர், வாயலூர் பள்ளி ஆசிரியர் முகமது அர்ஷாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று 38 மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டு, 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் செங்கை மாவட்டத்தில் இருந்து மட்டும் 4 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

The post ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட, அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்வு! appeared first on Dinakaran.

Tags : Yuri Kakar ,Space Exploration Center ,Russia ,Pallavaram ,Yuri ,Kakar ,
× RELATED தமிழக மக்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு...