×

வீரபாண்டி மாரியம்மன் கோயில் திருவிழா: ரூ.1.96 கோடிக்கு ராட்டினம் ஏலம்

தேனி, ஏப். 13: தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்காக கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட ராட்டின ஏலம் ரூ. 1 கோடியே 96 லட்சத்திற்கு போனது. தேனி அருகே வீரபாண்டியில் புகழ்பெற்ற கவுமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா வருகிற மே 9ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை 8 நாட்கள் நடத்தப்பட உள்ளது. இதற்கான கொடிமரம் நடுதல் நிகழ்ச்சி வருகிற ஏப். 19ம் தேதி நடக்க உள்ளது. தேர்த்திருவிழா வருகிற மே 12ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் நடத்தவும், கேளிக்கை அம்சங்களை அமைத்துக்கொள்ளவும் இந்து சமய அறநிலையத் துறை ஏலம் விடும். இந்த திருவிழாவில் கடந்த ஆண்டு நடந்த ஏலத்தொகையில் இருந்து 10 சதவீதம் அதிகம் வைத்து டெண்டர் விடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, கடந்த மார்ச் 31ம் தேதி ஏலம் விடப்பட்டது. இதில் முடிகாணிக்கைக்கான ஏலம் மட்டும் அரசு நிர்ணயித்த தொகையைக் காட்டிலும் கூடுதல் தொகையான ரூ.9 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் கேட்கப்பட்டது. இதையடுத்து, இதற்கான உரிமம் குத்தகைதாரருக்கு வழங்கப்பட்டது. ராட்டினம், உணவு கூடம் கண்மலர் ஆகியவற்றிற்கான ஏலம் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கண்மலர்கண்அடக்கம், உணவு கூடம் அமைப்பதற்கான ஏலம், ராட்டினம் ஏலம் ஆகியவற்றிற்கான ஏலம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் திண்டுக்கல் மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பாரதி தலைமையில் நடந்தது. இதில் கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து, மேலாளர் பாலசுப்பிரமணியன், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் ஏலத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர். நேற்று நடந்த ஏலத்தின்போது, கண்மலர் கண்அடக்கத்திற்கான ஏலத்தில் ரூ.4 லட்சத்திற்கு வீரபாண்டியை சேர்ந்த பிரபு எடுத்தார். உணவுகூடத்திற்கான ஏலத்தையும் பிரபு ரூ.25 லட்சத்து ஆயிரத்திற்கு எடுத்தார். அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ராட்டின ஏலத்தில் 15 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் ஏலக்கேள்வியின்போது, குணசேகர் என்பவர் ரூ.1 கோடியே 80 லட்சத்து 20 ஆயிரத்திற்கு ஏலம் கேட்டார். இதனைத்தொடர்ந்து ஒப்பந்த புள்ளியாக பெட்டியை திறந்தபோது தேனியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ராட்டின ஏலத்தை ரூ.1 கோடியே 96 லட்சத்திற்கு கேட்டிருந்தார். இதனையடுத்து ராட்டின ஏலம் கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ராட்டின ஏலம் ரூ.1 கோடியே 36 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்தாண்டு ரூ.60 லட்சம் அதிகமாக ஏலம் போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வீரபாண்டி மாரியம்மன் கோயில் திருவிழா: ரூ.1.96 கோடிக்கு ராட்டினம் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Veerapandi Mariamman Temple Festival ,Rathina ,Theni ,Ratinam ,Gaumariamman temple festival ,Veerapandi ,Veerapandi Mariyamman temple festival ,
× RELATED ராயப்பேட்டை துர்கை அம்மன் கோயில்...