×

அடிப்படை வசதிகளின்றி இயங்கும் சிறுவாலை அரசு பள்ளி

விக்கிரவாண்டி, ஏப். 13: விக்கிரவாண்டி அருகே உள்ள சிறுவாலை கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி இயங்குவதால் மாணவ மாணவிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிறுவாலை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அதனை ஒட்டி அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் இப்பள்ளியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, மதில் சுவர் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் இப்பள்ளிக்குள் புகுந்து மது குடித்துவிட்டு பாட்டிலை உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். துர்நாற்றத்துக்கு மத்தியில் கல்வி கற்கும் அவலநிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் வரும் மதுபிரியர்கள் பள்ளியில் உள்ள குடிநீர் குழாயை உடைத்து விட்டு செல்வதால் குடிநீர் இல்லாமல் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இதுமட்டுமின்றி கழிவறை போன்ற அத்தியாவசிய வசதிகள் எதுவும் இன்றி மாணவர்கள் பயின்று வருவதாக பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிவறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதுடன், பள்ளியின் பாதுகாப்புக்கு காவலாளிைய நியமிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அடிப்படை வசதிகளின்றி இயங்கும் சிறுவாலை அரசு பள்ளி appeared first on Dinakaran.

Tags : Siruvale Govt School ,Vikravandi ,Siruwalai ,Siruwalai government school ,Dinakaran ,
× RELATED நச்சுக்காற்றால் பொதுமக்கள் பாதிப்பு;...