×

சூப்பர் கிங்சுக்கு எதிராக ராயல்ஸ் வெற்றி: டோனி அதிரடி வீண்

சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீசியது. அந்த அணியில் சான்ட்னர், பிரிடோரியசுக்கு பதிலாக மொயீன், தீக்‌ஷனா சேர்க்கப்பட்டனர். ஜெய்ஸ்வால், பட்லர் இருவரும் ராஜஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 10 ரன் எடுத்து தேஷ்பாண்டே பந்துவீச்சில் துபே வசம் பிடிபட்டார். அடுத்து பட்லர் – படிக்கல் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்தனர். ஜடேஜா வீசிய 9வது ஓவரில் படிக்கல் 38 ரன் (26 பந்து, 5 பவுண்டரி), கேப்டன் சஞ்சு சாம்சன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ராயல்ஸ் 88 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் பட்லர் – அஷ்வின் ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 47 ரன் சேர்த்தது. அஷ்வின் 30 ரன் (22 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), பட்லர் 52 ரன் (36 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் ஷிம்ரோம் ஹெட்மயர் அதிரடியில் இறங்க ராஜஸ்தான் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. ஜுரெல் 4 ரன்னில் வெளியேற, ஹோல்டர் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கடைசி பந்தில் ஆடம் ஸம்பா (1 ரன்) ரன் அவுட்டாக, ரா ஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன் குவித்தது. ஹெட்மயர் 30 ரன்னுடன் (18 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை பந்துவீச்சில் ஆகாஷ் சிங், தேஷ்பாண்டே, ஜடேஜா தலா 2 விக்கெட், மொயீன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து, 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 50 ரன் (38 பந்து, 6 பவுண்டரி) எடுத்தார். கடைசி கட்டத்தில் கேப்டன் டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் அபாரமாக ஆடினர். கடைசி 2 ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 40 ரன் தேவை என்ற நிலையில் 19வது ஓவரில் ஜடேஜா 2 சிக்சர், ஒரு பவுண்டரியை பறக்கவிட ஆட்டத்தில் விறுவிறுப்பு எகிறியது. கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 21 ரன் என்ற நிலையில், 3, 4வது பந்துகளில் டோனி அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டதால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர்.

ஆனால், கடைசி பந்தில் 5 ரன் தேவை என்ற நிலையில் அந்த பந்தில் டோனி 1 ரன் மட்டுமே எடுத்ததால் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. டோனி 17 பந்தில் 32 ரன்னுடனும் (3 சிக்சர், 1 பவுண்டரி), ஜடேஜா 15 பந்தில் 25 ரன்னுடனும் (2 சிக்சர், 1 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் அஷ்வின், சாஹல் தலா 2 விக்கெட்களும், ஜம்பா, சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ராஜஸ்தான் ராயல்ஸ் 2 புள்ளிகளை தட்டிச் சென்றதுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கும் முன்னேறியது.

The post சூப்பர் கிங்சுக்கு எதிராக ராயல்ஸ் வெற்றி: டோனி அதிரடி வீண் appeared first on Dinakaran.

Tags : Royals ,Super Kings ,Tony ,Chennai ,IPL league ,CSK ,Rajasthan Royals ,Dhoni ,Dinakaran ,
× RELATED ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்;...