×

ஏரலில் பெண்களிடம் நகைபறித்த 2 வாலிபர்கள் கைது

ஏரல், ஏப். 13: ஏரல் அருகே பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர். ஏரல் அருகே முக்காணி தேவர் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (51). இவர், ஏரல் பஸ் நிலையம் அருகே சுக்கு காபி கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் 20ம் தேதி இரவு 10 மணிக்கு பாலசுப்பிரமணியன் கடையை அடைத்து விட்டு மொபட்டில் மனைவி பாக்கியலட்சுமியுடன் ஏரல் -முக்காணி ரோடு வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். உமரிக்காடு அருகே வரும்போது பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாக்கியலட்சுமி கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றனர். அவரும் செயினை பிடித்துக் கொள்ள 2 துண்டான செயினில் 13 கிராம் நகையை மட்டும் மர்மநபர்கள் பறித்துக் கொண்டு தப்பினர். இதேபோல் கடந்த ஏப்.3ம் தேதி இரவு வடக்கு ஆத்தூர் வடக்குரதவீதி பாலகணேஷ் (43), தனது மனைவி பார்வதியுடன் பைக்கில் ஏரல் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிவிட்டு ஏரல்- முக்காணி ரோடு வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். உமரிக்காடு நெல் அவுல்பட்டறை அருகில் சென்ற போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பார்வதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இச்சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஏரல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லெட்சுமி பிரபா தலைமையில் போலீசார், உமரிக்காடு அடுத்த ஆலடியூர் பஸ் ஸ்டாப் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவ்வழியாக பைக்கில் சந்தேகப்படும்படி வந்த 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் வந்த வழியே தப்ப முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கினர். விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் வேல்சாமி மகன் மாரிச்செல்வம் (22), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் சத்தியவாசகம் மகன் சிவா (22) என்பதும், இவர்கள்தான் ஏரல்- முக்காணி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

The post ஏரலில் பெண்களிடம் நகை
பறித்த 2 வாலிபர்கள் கைது
appeared first on Dinakaran.

Tags : Erel ,Arel ,Tuticorin ,Eral ,
× RELATED கோவில்பட்டி அருகே தறிக்கெட்டு ஓடிய...