×

பேருந்து நிலையம் வராமல் சென்றதால் மாநகர பேருந்தை சிறை பிடித்த மக்கள்: கண்டக்டர், டிரைவரிடம் வாக்குவாதம்

சென்னை, ஏப்.13: குன்றத்தூர் ஒன்றியம், சோமங்கலம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், சோமங்கலத்தை சுற்றியுள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சோமங்கலம் பேருந்து நிலையம் வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், வடபழனியில் இருந்து சோமங்கலம் வழியாக பெரும்புதூர் வரை (தடம் எண்.578ஏ), மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து வடபழனியில் இருந்து போரூர், குன்றத்தூர், பூந்தண்டலம், சோமங்கலம், நல்லூர் வழியாக ஸ்ரீபெரும்புதூர் வரை இயக்கப்படுகிறது. ஆனால், இந்த பேருந்து தற்போது சோமங்கலம் பேருந்து நிலையம் வராமல், பெரும்புதூர் – குன்றத்தூர் சாலை வழியாக நேரடியாக பெரும்புதூர் சென்று வருகிறது.

இதனால் நல்லூர், சோமங்கலம், மேலத்தூர், பூந்தண்டலம், சக்திநகர் மற்றும் அதை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பேருந்து வராததால் பெரும் பாதிப்படைந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சோமங்கலம் பேருந்து நிலையம் வந்த அரசு பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்து டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சோமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரசு பேருந்தை நம்பி சென்னை புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில், (தடம் எண்:578ஏ) என்ற மாநகர பேருந்து மேற்கண்ட கிராமங்கள் வழியாக செல்லாமல், பெரும்புதூர் – குன்றத்தூர் சாலை வழியாக சென்று வருகிறது. இதனால், இந்த பேருந்தை நம்பி காத்திருக்கும் கிராமமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே, பேருந்தை சரியான வழித்தடத்தில் இயக்காத டிரைவர், கண்டக்டர் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post பேருந்து நிலையம் வராமல் சென்றதால் மாநகர பேருந்தை சிறை பிடித்த மக்கள்: கண்டக்டர், டிரைவரிடம் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Somangalam ,Kunradhur ,
× RELATED போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய கண்ணகி...