×

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து இரும்புலியூர் வரை உயர்மட்ட மேம்பாலம்: பேரவையில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை, ஏப்.13: மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் இரும்புலியூர் வரை உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி பேரவையில் வலியுறுத்தினார். சட்டசபையில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை மானியக்கோரிக்கையின் போது பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது:
அரசு நிலத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் நிலங்கள் சொந்தமாக்கப்பட வேண்டும். சென்னையில் மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ப பல ஏரிகள் குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. எனவே, அரசு இந்த சூழ்நிலையை உணர்ந்து, நிலங்களை வகை மாற்றம் செய்ய வேண்டும். ஏரி, நீர்நிலைகளை தவிர பயனற்ற நிலங்களில் வசிக்கின்ற மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் இந்த கோரிக்கைகள் எழுந்து கொண்டிருக்கின்றன.

முதல்வர், பொதுமக்கள் மூலம் வரப்பெறும் குறைகளை கேட்டு இதன் விளைவாக தமிழ்நாடு அரசு அரசு நிலங்களை உட்பிரிவு செய்து மாவட்ட ஆட்சியர் மூலம் பட்டா வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. இந்த அரசாணைகளை நடைமுறைப்படுத்தினால், 90% இந்த பட்டாக்களுக்கு தீர்வு காண முடியும். குறிப்பாக, 234 தொகுதிகளுக்கு மட்டும் கேட்கவில்லை. என்னுடைய பல்லாவரம் தொகுதிக்கும் கேட்கிறேன். பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூர் கிராமத்தில் 693, பம்மல் கிராமத்தில் 2305, அனகாபுத்தூர் கிராமத்தில் 5860, திருநீர்மலை கிராமத்தில் 29, ஜமீன் பல்லாவரம் கிராமத்தில் 394, அஸ்தினாபுரம் கிராமத்தில் 45, திரிசூலம் கிராமத்தில் 1601 ஆக கிட்டத்தட்ட ஒரு தொகுதியில் 10,801 பட்டாக்கள் வழங்கப்படாமல் இருக்கிறது என்று சொன்னால் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் பட்டாக்கள் வழங்க வேண்டும்.

பல்லாவரம், கீழ்கட்டளை பகுதியில், 1991ம் ஆண்டு வாரியத்தால் 55.57 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. உயர் நீதிமன்றம் வாரியத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. 13 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட இடம் உரிமையாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
பல்லாவரம் தொகுதி, குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி ரயில்வே கேட் அருகில் உள்ள சிக்னலில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் (எஸ்கலேட்டர்) அமைக்க வேண்டும். பல்லாவரம் தொகுதி, குரோம்பேட்டையிலிந்து எம்ஐடி மேம்பாலம், அஸ்தினாபுரம்- ராஜேந்திர பிரசாத் சாலை, திருமலைநகர், செம்பாக்கம் வழியாக நன்மங்கலம் மற்றும் மேடவாக்கம் செல்லும் சாலையை அலைப்படுத்தி, விரிவாக்கம் செய்து, மழைநீர் கால்வாயுடன் சாலை அமைக்க வேண்டும்.

பல்லாவரம் தொகுதி, தேசிய நெடுஞ்சாலையில் குரோம்பேட்டை பகுதியில் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து தாம்பரம் இரும்புலியூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். சென்னையில் மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ப பல ஏரிகள் குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. எனவே, அரசு இந்த சூழ்நிலையை உணர்ந்து, நிலங்களை வகை மாற்றம் செய்ய வேண்டும்.

The post மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து இரும்புலியூர் வரை உயர்மட்ட மேம்பாலம்: பேரவையில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Meenambakkam Airport ,Iruvanliyur ,Pallavaram MLA ,E. Karunanidhi ,Chennai ,Tambaram Iruvalliyur ,Meenampakkam airport ,Iruvalliyur ,Dinakaran ,
× RELATED பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு.....