×

வேட்பாளர் பட்டியலில் இடம் இல்லாததால் கர்நாடக பா.ஜவில் கடும் மோதல்

  • 2 அமைச்சர், 7 எம்எல்ஏ ஆதரவாளர்கள் போர்க்கொடி
  • மாஜி துணை முதல்வர் கட்சியை விட்டு விலகல்
  • பல இடங்களில் போராட்டம்
  • அதிருப்தியை சமாளிக்க முடியாமல் தவிப்பு

கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் முதல் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டன. பாஜ சார்பில் 189 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைமை நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் 52 புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் சிலருக்கும், அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. பாஜ வெளியிட்டுள்ள முதல் பட்டியலில் தற்போது அமைச்சர்களாக இருக்கும் எஸ்.அங்காரா மற்றும் ஆனந்த்சிங், தற்போதைய எம்எல்ஏக்கள் 7 பேருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதேபோல் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, அரவிந்தலிம்பாவளி, எஸ்.ஏ.ராமதாஸ், எம்எல்ஏக்கள் நேரு ஹோளேகார், எம்.பி.குமாரசாமி, பரமமுனவள்ளி, களகப்பாபண்டி, சுகுமார்ஷெட்டி ஆகியோர் தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது எம்எல்ஏவாக இருப்பவர்களில் 9 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் புறக்கணித்துள்ளதால், அவர்களின் ஆதரவாளர்கள் தொகுதியில் உள்ள பாஜ அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சிலர் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் எதிரிலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சித்ரதுர்கா மாவட்டம், ஹொசதுர்கா நகரில் தற்போதைய எம்எல்ஏ கூளிஹட்டிசேகருக்கு சீட் வழங்காததை கண்டித்து ஆதரவாளர்கள் சாலையில் டயர்களை கொளுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இதே போல் அமைச்சர் அங்காரா ஆதரவாளர்களும் கொந்தளித்த நிலையில் உள்ளனர். இதனிடையில் மாநில வீட்டு வசதிதுறை அமைச்சர் வி.சோமண்ணா, பெங்களூருவில் உள்ள கோவிந்தராஜ்நகர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவருக்கு கோவிந்தராஜ்நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல் சாம்ராஜ்நகர் மற்றும் வருணா ஆகிய இரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்துள்ள சோமண்ணாவின் ஆதரவாளர்கள், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தினர். ஹாவேரி மாவட்டம், ரானிபென்னூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தராததால் பாஜ எம்எல்சி ஆர்.சங்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதானி தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்தவரும் முன்னாள் துணை முதல்வருமான லட்சுமண் சவதியின் பெயர் பாஜ வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் அத்தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ மகேஷ்குமட்டஹள்ளி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சவதி பாஜவில் அடிப்படை உறுப்பினர் பதவி முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாகல்கோட்டை மாவட்டம், பாதாமி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்த மூத்த தலைவர்கள் எம்.கே.பட்டனஷெட்டி, மஹாந்தேஷ் மமதாபுரா ஆகியோர் கட்சி தலைமை வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டினர். எங்கள் உழைப்பை உதாசீனப்படுத்தி இருக்கும் பாஜவுக்கு பாடம் புகட்டும் வகையில் வரும் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட சபதம் செய்துள்ளதாக தெரிவித்தனர். தார்வார் ஊரக தொகுதியில் போட்டியிட மூத்த பாஜ தலைவர் தவனப்பா அஷ்டகி வாய்ப்பு கேட்டிருந்தார். அவருக்கு வாய்ப்பு வழங்காமல் புது முகத்துக்கு வாய்ப்பு வழங்கியதால், அதிருப்தி அடைந்த அவர், நேற்று பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக தலைவர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துவிட்டார். இதே போல் சீட் கிடைக்காத தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது, பாஜவுக்கு கர்நாடக தேர்தல் களத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷாவுடன் சந்திப்பு
போர்க்கொடி தூக்கிய முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இரண்டாவது பட்டியலில் அவரது பெயர் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நேற்று ஜெகதீஷ் ஷெட்டர் டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

கண்ணீர் விட்டு கதறிய எம்எல்ஏ
உடுப்பி எம்எல்ஏ கூறுகையில், ‘கட்சி மேலிடம் எடுத்த முடிவால் எனக்கு வருத்தம் இல்லை. ஆனால் அவர்கள் என்னை நடத்திய விதம் மிகவும் வேதனையளிக்கிறது’ என்று கூறும்போதே கண்ணீர்விட்டு அழுதார்.

அரசியலில் இருந்து அமைச்சர் விலகல்
வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமல் தவிர்த்துள்ளதால், விரக்தியடைந்த மாநில மீன் வளத்துறை அமைச்சர் எஸ்.அங்காரா தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்துள்ளார்.

The post வேட்பாளர் பட்டியலில் இடம் இல்லாததால் கர்நாடக பா.ஜவில் கடும் மோதல் appeared first on Dinakaran.

Tags : Karnataka Pa ,Javili ,Karnataka State Assembly ,Congress ,Majhta ,Karnataka ,Pa ,Dinakaran ,
× RELATED பேரவையில் பாக். ஆதரவு கோஷம் காங்கிரஸ்...