×

கொரோனா அதிகரிப்பு எதிரொலி; கோவிஷீல்டு உற்பத்தி மீண்டும் தொடக்கம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை தொடங்க இருப்பதாக சீரம் நிறுவன சிஇஓ ஆதார் பூனவல்லா அறிவித்துள்ளார். புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை தயாரித்து வருகிறது. நாட்டில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாலும், கொரோனா தொற்று குறைந்ததாலும் கடந்த 2021 டிசம்பரில் கோவிஷீல்டு உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி இருப்பதால் கோவிஷீல்டு உற்பத்தியை தொடங்க இருப்பதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன் சிஇஓ ஆதார் பூனவல்லா நேற்று அளித்த பேட்டியில், ‘‘முன்னெச்சரிக்கை கருதி மீண்டும் கோவிஷீல்டு உற்பத்தியை தொடங்க உள்ளோம். ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக கோவோவாக்ஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் 60 லட்சம் கையிருப்பில் உள்ளன. ஆனாலும், சிலர் கோவிஷீல்டு தடுப்பூசியை விரும்புவதால் அதன் உற்பத்தி தொடங்கப்படுகிறது. அடுத்த 90 நாட்களில் 60 முதல் 70 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும். தேவை பொறுத்து உற்பத்தியை அதிகரிக்க 9 மாதங்கள் வரை ஆகலாம்.

தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக வரும் தகவல்களில் உண்மையில்லை’’ என்றார். இதற்கிடையே, நேற்று காலை 8 மணி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 7,830 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 16 பேர் இறந்திருப்பதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10 நாளில் குறையும்
ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்தியாவில் கொரோனா வைரஸ் எண்டமிக் கட்டத்தை நோக்கி செல்கிறது. எனவே தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் அடுத்த 10 அல்லது 12 நாட்களில் மீண்டும் குறையத் தொடங்கும். ஒமிக்ரான் வைரசின் துணை மாறுபாடு எக்ஸ்பிபி.1.16 வகை வைரசால் தற்போது தொற்று அதிகரிக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிப்போர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது’’ என்றனர்.

The post கொரோனா அதிகரிப்பு எதிரொலி; கோவிஷீல்டு உற்பத்தி மீண்டும் தொடக்கம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,CEO ,Govishield ,Dinakaran ,
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...