×

கால்வாயில் பதுக்கல் வெடிகுண்டை கடித்த நாய் பரிதாப பலி

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வரகூர் ஊராட்சியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே வனப்பகுதி அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதன் பக்கவாட்டில் மலையில் இருந்து மழைநீர் வருவதற்கான நீர்வரத்து கால்வாய் உள்ளது. இப்பகுதி வழியாக நேற்று காலை கிராம மக்கள் சென்றபோது கால்வாயில் நாய் ஒன்று வாய் சிதறிய நிலையில் இறந்து கிடந்தது. தகவலறிந்து வாணாபுரம் போலீசார் வந்து சோதனை நடத்தினர். கால்வாயில் மர்ம பை கிடந்தது. அதனை போலீசார் திறந்து பார்த்தபோது அதில் 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன.

மற்ற பகுதிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆங்காங்கே 6 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின. அவற்றை போலீசார் கைப்பற்றினர். காளியம்மன் கோயில் அருகே வனப்பகுதியில் ஏராளமான காட்டுப்பன்றிகள், புள்ளிமான், முயல் உள்ளிட்டவை வசிக்கிறது. இவை அவ்வப்போது நீர்வரத்து கால்வாய் வழியாக மலைப்பகுதிக்கு சென்று வருமாம். இவற்றை வேட்டையாடுவதற்காக நள்ளிரவில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருக்கலாம் என தெரிகிறது. இதனை நாய் கடித்ததால் வாய் சிதறி இறந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து நாட்டு வெடிகுண்டுகைள பதுக்கிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

The post கால்வாயில் பதுக்கல் வெடிகுண்டை கடித்த நாய் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Thandarampatu ,Kaliyamman temple ,Varakur panchayat ,Tiruvannamalai ,Dinakaran ,
× RELATED காளியம்மன் கோயில் திருவிழா களைகட்டிய...