×

ஊராட்சி உறுப்பினர்கள், கிளார்க் டார்ச்சர் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து பெண் தற்கொலை: 5 பெண் குழந்தைகள் பரிதவிப்பு; உருக்கமான கடிதம் சிக்கியது

திருமங்கலம்: திருமங்கலம் அருகே, 5 பெண் குழந்தைகளின் தாயான, நூறுநாள் வேலை திட்ட பெண் பணித்தள பொறுப்பாளர் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (36). கோவையில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி (31) பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி இவர் மதுரை கலெக்டரிடம், 100 நாள் வேலையில் பணித்தள பொறுப்பாளர் பணி கேட்டு விண்ணப்பித்தார். அதை பரிசீலனை செய்த கலெக்டர், 2 ஆண்டுகளுக்கு முன்பு பணித்தள பொறுப்பாளர் பணிக்கான உத்தரவை வழங்கினார்.

அதன்படி மையிட்டான்பட்டி கிராமத்தில் நூறு நாள் வேலை பணித்தள பொறுப்பாளர் பணியை செய்து வந்தார். கலெக்டரின் உத்தரவுப்படி நேரடியாக சேர்ந்ததால் மையிட்டான்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் மற்றும் ஊராட்சி கிளார்க் முத்து ஆகியோர் அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி நாகலட்சுமி கள்ளிக்குடி போலீசில் 2 நாட்களுக்கு முன் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்திச் சென்றனர். இதனால் மீண்டும் ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி கிளார்க் நாகலட்சுமியை அவதூறாக பேசி சத்தம் போட்டதாகத் தெரிகிறது. இதனால் மனவேதனையடைந்த நாகலட்சுமி, கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்தார்.

நேற்று பகல் 12 மணியளவில் மையிட்டான்பட்டியில் இருந்து திருமங்கலம் வழியாக மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்லும் டவுன்பஸ்சில் கடைசி இரண்டு பெண் குழந்தைகளுடன் சென்றார். மனவிரக்தியில் இருந்த நாகலட்சுமி, சிவரக்கோட்டை அருகே பஸ் சென்றபோது அருகேயிருந்த பயணிகளிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு, ஓடும் பஸ்சில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ராஜூ பஸ்சை நிறுத்தி இறங்கி அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் நாகலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் வந்து நாகலட்சுமியின் கைப்பையை சோதனையிட்டனர். அதில் அவர் எழுதியிருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், நூறு நாள் வேலை பொறுப்பாளராக பணிபுரிய கலெக்டர் பணி வழங்கியும், வேலை வழங்க மறுத்து மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், கிளார்க் முத்து தவறாக பேசிவருவதாகவும் இதனால் தற்கொலை முயற்சியில் ஈடுபட போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். தாய் தற்கொலை செய்ததால் 5 பெண் குழந்தைகளும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ஊராட்சி உறுப்பினர்கள், கிளார்க் டார்ச்சர் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து பெண் தற்கொலை: 5 பெண் குழந்தைகள் பரிதவிப்பு; உருக்கமான கடிதம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Torcher ,Tirumangalam ,
× RELATED பிரானூர் ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை