×

கனிமவள கொள்ளையை தட்டிக்கேட்ட ஊராட்சி தலைவரை தாக்கிய பாஜவினர்: கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தை மக்கள் முற்றுகை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே கனிமவள கொள்ளையை தட்டிக்கேட்ட ஊராட்சி தலைவர் மீது பாஜவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் நம்பர் 10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் திமுகவை சேர்ந்த சதீஷ்குமார். நேற்று முன்தினம் நள்ளிரவு ஊராட்சிக்கு அருகில் கனிமவள கொள்ளை நடப்பதாகவும், அதை தட்டிக்கேட்ட தங்களை மிரட்டுவதாகவும், இளைஞர்கள் சிலர் சதீஷ்குமாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து பைக்கில் அங்கு சென்ற அவர், கனிமவள கொள்ளையில் ஈடுபட்டிருந்த பாஜ நிர்வாகிகளான சாந்தலிங்கம், ஈஸ்வரன், கருப்புசாமி, கைலாசப்பன், சக்திவேல் ஆகியோரிடம், ‘‘இது உங்கள் இடமாக இருந்தாலும் முறைப்படி அனுமதி வாங்கித்தான் மண் எடுக்க வேண்டும். தட்டிக்கேட்பவர்களை மிரட்டுவது தவறு’’ என்று கூறியுள்ளார். அதற்கு அவர்கள் தகாத வார்த்தைகளால் சதீஷ்குமாரை திட்டி அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சதீஷ்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு வந்து இது தொடர்பாக புகார் அளித்தனர்.

இந்நிலையில் நெம்பர் 10 முத்தூர் பகுதியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் நடத்திய பாஜவினரை உடனே கைது செய்யக்கோரி கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பினர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய சாந்தலிங்கம், ஈஸ்வரன், கைலாசப்பன், கருப்புசாமி, சக்திவேல் ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கைலாசப்பன், கருப்புசாமி, சக்திவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

  • வீடு புகுந்து பெண் மீது தாக்குதல் அதிமுக ஊராட்சி தலைவர் மீது வழக்கு
    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அருண்குமார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மாடுகள் மற்றும் கோழிப்பண்ணை வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாடுகள் திடீரென உடல் நலம் பாதித்து சோர்வுடன் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு மாடு திடீரென இறந்துள்ளது. இது குறித்து கால்நடை மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்ததில் புண்ணாக்கில் யாரோ விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. கடந்த 2 ஆண்டாக அருண்குமாருக்கும் அவரது மைத்துனரும் பருவாய் அதிமுக ஊராட்சி தலைவருமான ரவிச்சந்திரனுக்கும் சொத்து பிரச்னை இருந்துள்ளது. நேற்று அருண்குமாரின் வீட்டுக்கு ரவிச்சந்திரன் திடீரென வந்து அவரது மனைவி கவிதாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த கவிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் ஊராட்சி தலைவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post கனிமவள கொள்ளையை தட்டிக்கேட்ட ஊராட்சி தலைவரை தாக்கிய பாஜவினர்: கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தை மக்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Kinathukkadavu police station ,Panchayat ,Kinathukadavu ,BJP ,president ,Dinakaran ,
× RELATED ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் கைது: பாஜவை சேர்ந்தவர்