×

மதுரையில் ராபிடோ பைக் டாக்சிக்கு தடை: மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

மதுரை: மதுரையில் பைக் டாக்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் ஆகியோர் நேற்று விடுத்துள்ள அறிக்கை: ராபிடோ பைக் டாக்சி என்ற கர்நாடகா மாநிலத்தை தலைமையகமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனம் மதுரையில் வாடகை கார்கள் இயங்குவது போல், பைக் டாக்ஸிகளை இயக்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முறையான அங்கீகாரம் பெறாமல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைக் உரிமையாளர்களை உறுப்பினர்களாக்கி பைக் டாக்சிகளை இயக்கி வந்தது.

இதில் 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது மதுரை மாநகர வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் கடந்த வாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மதுரையில் நடந்த மாவட்ட சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, இது போன்ற பைக் டாக்ஸிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சட்டப்படி அங்கீகாரம் பெறாத ராபிடோ பைக் டாக்ஸி நிறுவனத்திடம் மொபைல் ஆப் வழியாக தொடர்புகொண்டு, வாடகைக்கு இரண்டு சக்கர வாகனங்களை இயக்கும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வாகனத்தை பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post மதுரையில் ராபிடோ பைக் டாக்சிக்கு தடை: மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Rapido Bike Taxi ,Maduram ,Madurai ,Madur ,Dinakaran ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...