×

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் 10 நாளில் தேர்தல் ஆணையம் முடிவு: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை சின்னம் விவகாரங்களில் அடுத்த பத்து நாளில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த ரிட் மனுக்களை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் இரண்டு ரிட் மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘அதிமுகவின் புதிய விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை அங்கீகரிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் அதேப்போன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தாமதிக்காமல் அங்கீகரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த 2 ரிட் மனுக்களும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புருஷாய்ந்திர குமார் கவுரவ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,‘‘அதிமுக கட்சியின் புதிய விதிமுறைகள் மற்றும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். மேலும் கர்நாடகா சட்டபேரவைத் தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தாமல் துரிதமாக செயல்பட்டு வெகு விரைவில் பதிலளிக்க உத்தரவிட வேண்டும்’’ என தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,‘‘ முன்னதாக அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தொடர்ந்து பரிசீலித்து வருகிறோம். இருப்பினும் அதனை முடிக்க பத்து நாட்கள் அவகாசம் வேண்டும்’’ என தெரிவித்தார்

இதையடுத்து மேற்கண்ட இரு தரப்பு வாதங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கறிஞர் குருகிருஷ்ண குமார்,‘‘அதிமுக விவகாரத்தில் தொடரப்பட்ட சிவில் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் எந்த காரணமும் இல்லாமல் ஓ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் தற்போது நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம்’’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, முதலில் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒரு முடிவை மேற்கொள்ளட்டும். இருப்பினும் உங்களது தரப்பை கேட்காமல் இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாது என ஓ.பி.எஸ் தரப்பிடம் தெரிவித்தார்.

இதையடுத்து பிறபித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்ற தலைமை தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இருப்பினும், இந்த விஷயத்தில் மேலும் காலதாமதம் செய்யாமல் தலைமை தேர்தல் ஆணையம் துரிதமாக முடிவெடுத்து அதிமுக கட்சி தொடர்பான விவகாரத்தில் விரைந்து அறிவிப்பை வெளியிட வேண்டும்’’ என உத்தரவிட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இரண்டு ரிட் வழக்குகளையும் முடித்து வைத்தார்.

The post இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் 10 நாளில் தேர்தல் ஆணையம் முடிவு: டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Delhi iCourt ,New Delhi ,Intellectual General Council ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...