×

கூடுதல் மருத்துவ உதவிகள் கேட்டு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம்

புதுடெல்லி: போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு கூடுதல் மருத்துவ உதவிகள் கேட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும் ஓராண்டை கடந்து போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா, ஜெர்மன், போலந்து உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.

உக்ரைன் ரஷ்யா போரில் நடுநிலை வகித்து வரும் இந்தியாவும் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு உதவ கூடுதல் மருந்து, மருத்துவ உபகரணங்களை கேட்டு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம் எழுதியுள்ளதாக இந்திய வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உக்ரைன் வௌியுறவுத்துறை இணைஅமைச்சர் எமின் தபரோவா இந்திய வௌியுறவுத்துறை இணைஅமைச்சர் மீனாட்சி லேகியை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கூடுதல் உதவிகள் கேட்டு உக்ரைன் அதிபர் எழுதிய கடிதத்தை எமின் தபரோவா மீனாட்சி லேகியிடம் வழங்கினார்.

இந்திய வௌியுறவுத்துறை வௌியிட்டுள்ள அறிவிப்பில், “போரால் உருக்குலைந்துள்ள உக்ரைனின் உள்கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்ய இந்திய நிறுவனங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என எமின் தபரோவா கூறினார்” என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து மீனாட்சி லேகி தனது ட்விட்டர் பதிவில், “உக்ரைனின் முதல் வௌியுறவுத்துறை அமைச்சரை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஒத்த கருத்துடைய இருநாடுகளும் இருதரப்பு பார்வைகளையும், உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் கருத்துகளை பரிமாறி கொண்டன” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைன் நாட்டுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா உறுதியளித்துள்ளதாக வௌியுறவுத்துறை கூறியுள்ளது.

The post கூடுதல் மருத்துவ உதவிகள் கேட்டு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம் appeared first on Dinakaran.

Tags : President ,Zelensky ,PM ,Modi ,New Delhi ,Ukraine ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...