×

மினி மீல்ஸ்

காயில் புளித்து கனியில் ருசிக்கும் மாம்பழத்தின் வரலாறு

மா தென்னிந்தியாவின் பூர்வீகக் கனி. குறிப்பாக, தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் உரியது. முக்கனிகளில் முதலானது. எக்கனியைவிடவும் ருசியானது. கோடை காலத்தின் பழ வகைகளில் மாம்பழம்தான் பிரதானமானது. மாம்பழத்தின் விளைச்சலைக் கொண்டே அந்த வருட மழையை அளவிடும் மனப்பழக்கம் தமிழகத்தில் இருந்தது. ‘புளிக்குப் பொங்கும் மாங்காய்க்கு மங்கும்’ என்று ஒரு பழமொழி உள்ளது.

புளி அதிகமாகக் காய்த்தால் அந்த வருடம் மழை அதிகமாகப் பொழிந்து ஆறுகள், கண்மாய்கள் பொங்கும். மாம்பழம் அதிகமாகக் காய்த்தால் மழை குறைந்து ஆறுகளின் நீர் இருப்பு மங்கும். இதுதான் அந்தப் பழமொழியின் விளக்கம். மா என்பது நம்மோடு எத்தனை ஆண்டுகள் பழமையான உறவுடையது என்பதைச் சொல்லும் பழமொழி இது.Mango என்ற ஆங்கிலச் சொல் ‘மேங்கா’என்ற போர்ச்சுகீசிய சொல்லில் இருந்து உருவானது.

போர்ச்சுகீசிய மொழிக்கு அந்த சொல்லைக் கடன் தந்தது தமிழ்தான். இந்தியாவுக்கு கடல் வழி தேடி கேரளம் வந்திறங்கிய போர்ச்சுகீசியர்கள் காயில் புளித்து கனியில் ருசிக்கும் இந்த விநோதப் பழத்தின் ருசிக்கு அடிமையாகி அதை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றனர். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சீன வணிக யாத்ரீகர் யுவான் சுவாங் தென்னிந்திய மாம்பழங்களின் ருசியை வியந்து போற்றியுள்ளார். முகலாயர்கள் காலத்தில் பலவகையான ஒட்டுரக மாம்பழங்கள் உருவாகின.

அல்போன்ஸா மாம்பழங்களின் பூர்வ வடிவம் அந்தக் காலகட்டத்தில்தான் உருவாகியது. ஆனால், போர்ச்சுகீசியர்களின் இந்திய வருகை இரு வேறு கனிகளை இணைத்துப் புதிய ரகங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியது. அப்படியான முயற்சி ஒன்றில் சுவை மிகுந்த குட்டை ரக மாம்பழம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதற்கு போர்ச்சுகீசிய ஜெனரலான அல்போன்ஸா டீ அல்ப்யூக்கெர் என்பவரின் பெயர் வைக்கப்பட்டது. அதுதான் பின்னாட்களில் அல்போன்ஸா மாம்பழம் என்ற பெயரில் தன் ருசியால் உலகையே ஆண்டுகொண்டிருக்கிறது. இன்று உலகின் ஒட்டுமொத்த மாம்பழ உற்பத்தியில் அறுபது சதவீதத்துக்கு மேல் இந்தியாதான் வழங்குகிறது.

பலாப் பழம்… மேற்குத் தொடர்ச்சி மலையின் குழந்தைதான்!

பல்லூழிக் காலங்களுக்கு முன் நமது மேற்குத்தொடர்ச்சி மலையில்தான் பலாவை இயற்கை படைத்தது. இன்று, பலா இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா, கொரியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா போன்ற பல நாடுகளிலும் பரவியிருக்கிறது. தென் தமிழகத்தில் கூழச்சக்கா என்றும் கூழப் பழம் என்று இருவகை உள்ளன. கூழச்சக்கா அளவில் சிறியவை. நார்த்தன்மை அதிகம். இனிப்பும் அதிகம். கூழப்பழம் பெரியவை.

பெரும்பாலும் விற்பனைக்கு இவைதான் கிடைக்கின்றன. ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் பலாப் பழ சீசன். தமிழகம், கேரளம் போலவே இலங்கையிலும் பலா மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. சிலோனின் வேர்ப்பலா பலா ரகங்களிலேயே சுவை மிகுந்தது என்பார்கள். இலங்கையில் கூழன் பழம், வருக்கன் பழம் என இவற்றைச் சொல்கிறார்கள். 1970களில் இலங்கையில் கடும் பஞ்சம் வந்தபோது பலாக்கறி சாப்பிட்டுதான் பலர் உயிர் வாழ்ந்தார்கள். இப்போதும் அங்கு ஒரு வீட்டில் பலாமரம் இருந்தால் பஞ்சமற்ற செல்வாக்கான வீடு என்று கருதுகிறார்கள்.

இந்தியாவில் கள்ளார், சஹரன்பூர் ஆகிய இடங்களில் பலா ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.பலாக்காயை பிஞ்சியிலேயே பறித்து சிறிதாக நறுக்கி சமைத்துச் சாப்பிடும் வழக்கம் இலங்கையிலும் கேரளத்திலும் உண்டு. அசைவக் கறிக்கு இணையான சுவையும் புரதமும் இதில் உண்டு. சற்றே பெரிதாக பலா வளர்ந்த பிறகு பழுப்பதற்கு முந்தைய நிலையில் பறித்தும் கறியாகச் சமைப்பார்கள்.

இது சுண்டல் போல மாலை நேர உணவாகப் பயன்படுகிறது. தமிழகத்தில் பலாப் பழத்தை அப்படியே சாப்பிடுவதுதான் வழக்கம். பலாவைக் கொண்டு பலாப்பழ அல்வாவும் இங்கு செய்வார்கள். பலாப்பழத்தை தேனில் ஊற வைத்துச் சாப்பிடும் வழக்கமும் உண்டு. பலாக் கொட்டைகளைக் கொண்டு குழம்பு வைக்கும் வழக்கமும், பலாக் கொட்டைகளை நெருப்பில் காட்டி வறுத்துச் சாப்பிடும் வழக்கமும் இங்கு உண்டு. பலாக் கனி பற்றி சங்க இலக்கியங்களில் நிறைய குறிப்புகள் உள்ளன. யானைகளுக்குப் பிடித்த கனி என்பதால் அதனோடு தொடர்புபடுத்தும் பாடல்கள் உள்ளன. தமிழரின் முக்கனிகளில் ஒன்றான பலாவுக்கு என்று தனி மதிப்பு உண்டு.

வாழவைக்கும் வாழைக்கு ஜே!

வாழை தமிழ் தொல் நிலத் தாவரங்களில் ஒன்று. தமிழர் வழிபடும் முக்கனிகளில் முக்கிய கனி வாழை. மாவையும் பலாவையும் சித்திரை முதல் நாள் மட்டுமே படைத்து வணங்கும் தமிழினத்தில் வாழை இல்லாத வழிபாடே இல்லை. சைவப் பழமான சாந்தமான கடவுளர் முதல் உருட்டி மிரட்டி நிற்கும் அசைவக்கார நாட்டார் தெய்வங்கள் வரை எல்லாவற்றுக்குமே வாழைப் பழத்தைப் படைப்பது நம் பண்பாட்டுப் பழக்கம். தமிழ் மருத்துவத்தில் வாழைக்கு தனியிடம் உண்டு. நச்சு நீக்கிகளில் வாழை தலையாயது.

வாழையும் மிளகும் சமையலில் இருந்தால் எதிரி வழங்கும் உணவாய் இருந்தாலும் உண்ணலாம் என்பார்கள். இவையிரண்டும் அவ்வளவு சிறப்பான நச்சு முறிப்பான்கள். பாம்பு உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு வாழைமட்டை, வாழை இலையில் படுக்க வைத்து வைத்தியம் பார்ப்பார்கள். சிறுநீரகக் கல்லுக்கு ஆங்கில மருத்துவமே அசந்து பார்ப்பது நம் வாழைச்சாற்று வைத்தியத்தைத்தான். வாழைப் பழம் உண்ணும் வழக்கம் நமக்கு அரைக் குரங்கு காலத்திலிருந்து வருகிறது என்கிறார்கள் மானுடவியலாளர்கள்.

வாழைக்கும் நம் வயிற்றில் வசிக்கும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்களுக்குமான உறவு என்பது வாழையடி வாழையாய் தொடரும் புராதன பந்தம். வாழையில் பயன்படாத பாகமே இல்லை. பூ, காய், பழம், தண்டு, இலை, சாறு என்று வாழை தன்னை மிச்சம் இல்லாமல் முழுவதுமாகத் தந்து நிற்கும் கற்பக விருட்சம். அது மட்டுமின்றி நான் போனாலும் என் குலம் உங்களை வாழ வைக்கும் என்று ஒரு வாரிசையும் மானுட சேவைக்கு வழங்கிவிட்டே செல்லும் அற்புத உயிர் வாழை. அதனால்தான் கால்நடைச் செல்வங்களை அழைப்பது போல் சின்னஞ் சிறு வாழையை வாழைக் கன்று என்றார்கள் நம் முன்னோர்.

இப்படி வாழையின் பெருமை சொன்னால் இந்தப் பக்கங்கள் போதாது.அறிவியல் ரீதியாகச் சொன்னால் வாழை என்பது பூண்டு வகையைச் சேர்ந்த தாவரப் பேரினம். அனைத்துவகையைச் சேர்ந்த வாழையையும் அறிவியல் வகைப்பாட்டில் மியுசா (Musa) என்ற லத்தீன் சொல்லால் விளிப்பார்கள். சங்க இலக்கியங் களிலேயே வாழை பற்றிய குறிப்புகள் இருந்தாலும் வாழை தமிழ்நாட்டுப் பூர்வீகம்கொண்டது அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வாழையின் பூர்வ நிலம் தென்கிழக்கு ஆசியாவின் பப்புவா நியூகினியாதான் என்கிறார்கள். தற்போதும் இந்த நாட்டில் காட்டு வாழைகள் தானாக வளர்வதைக் காணலாம். நியூ கினியாவின் குக் சதுப்பு நிலப்பகுதியில் (Kuk swamp) நடந்த அகழ்வாராய்ச்சி களின் படி அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது. வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு 600ம் ஆண்டு புத்தமத ஏடு
களில் காணப்படுகிறது. மாமன்னர் அலெக்சாந்தர் கி.மு 327ல் இந்தியாவில் வாழைப் பழத்தை சுவைத்ததற்கான குறிப்புகள் உள்ளன. கி.பி 200ம் ஆண்டில் சீனாவில் ஒழுங்குபடுத்திய வாழை சாகுபடி நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.கேமரூனில் கி.மு முதலாம் நூற்றாண்டில் வாழை விளைந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

இதனால் ஆப்பிரிக்காவில் வாழை எப்போது விளைவிக்கத் துவங்கப்பட்டது என்ற விவாதம் கிளம்பியுள்ளது. இதற்கு முன்னதாகச் சான்றுகள் கி.பி ஆறாம் நூற்றாண்டிலிருந்தே கிடைத்துள்ளன. ஆப்பிரிக்கா முழுமையாக என்று சொல்ல முடியாவிட்டாலும் மடகாஸ்கர் வரையாவது கி.மு நான்காம் நூற்றாண்டிலேயே வாழை சாகுபடி நடந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள் சிலர். கி.பி 650ல் முகலாயர்கள் இந்தியாவிலிருந்து வாழையை மத்திய கிழக்குப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றனர். அரேபிய வியாபாரிகள் வாழையை ஆப்பிரிக்கா முழுதும் பரப்பினர்.

பின்னர் போர்ச்சுகீசிய வியாபாரிகள் மூலமாக வாழை அமெரிக்க கண்டத்துக்கும் சென்றது.தினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் அட்லாண்டிக் தீவுகளில் பிரேசில் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் போர்த்துக்கீசிய குடியேற்றவாசிகள் வாழைத் தோப்புகளை அமைக்கத் தொடங்கினர். இதுதான் அமெரிக்க கண்டத்தில் வாழையின் தொடக்கம். பிறகு, அமெரிக்க உள்நாட்டுப் போரால் வாழையின் தேவை அங்கு உருவானது. சரியாகச் சொன்னால் 188 களிலிருந்து அங்கு வாழை மிகப்பரவலாக நுகரப்படுகிறது. ஐரோப்பாவில் விக்டோரியா மகாராணி காலம் வரை வாழை பரவலாக அறியப்படவில்லை. 1872ம் ஆண்டில் வெளியான உலகைச் சுற்றி எண்பது நாட்கள் என்ற நூலில் அதன் ஆசிரியர் யூல்ஸ் வெர்ன் வாழையைக் குறித்து விரிவாகப் பதிவு செய்தார்.

  • காரிகா

The post மினி மீல்ஸ் appeared first on Dinakaran.

Tags : South India ,Tamil Nadu ,Keralat ,
× RELATED தமிழ்நாட்டில் 24ம் தேதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பு