×

கோலி –அனுஷ்கா மகளுக்கு எதிரான சர்ச்சை கருத்து; ஐஐடி பட்டதாரி மீதான எப்ஐஆர் ரத்து: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: விராட் கோலி – அனுஷ்கா சர்மா ஆகியோரின் மகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட ஐஐடி பட்டதாரி மீதான எப்ஐஆரை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதையடுத்து ஐதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) பட்டதாரியான அகுபதினி என்பவர், அணியின் கேப்டனான விராட் கோலி மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவின் மகளுக்கு எதிராக பாலியல் ரீதியான சர்ச்சைக்குரிய பதிவை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதையடுத்து அகுபதினிக்கு எதிராக ஐபிசி பிரிவுகள் 354, 506, 500, 201 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் போலீசார் அகுபதினியை கைது செய்தனர். ஒன்பது நாட்களுக்குப் பிறகு உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அவர் தன் மீதான எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

இந்த வழக்கில், விராட் கோலி தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ஐஐடி பட்டதாரியான அகுபதினியின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட ஒப்புக் கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தார். மேலும் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அகுபதினி மீதான எப்ஐஆரை ரத்து செய்து உத்தரவிட்டது.

The post கோலி – அனுஷ்கா மகளுக்கு எதிரான சர்ச்சை கருத்து; ஐஐடி பட்டதாரி மீதான எப்ஐஆர் ரத்து: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kohli ,Anushka ,IIT ,Bombay High Court ,Mumbai ,Virat Kohli ,Anushka Sharma ,Dinakaran ,
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...