×

ஜுரம் போக்கும் ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்.

காலம்: ஆரம்பக்கட்டுமானம் 8-ஆம் நூற்றாண்டு பல்லவர், பின்னர் 12-ஆம் நூற்றாண்டில் விக்கிரம சோழர் கல்வெட்டுகளுடன் தற்போதைய கட்டுமானம்.

புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு; நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி’’

காளிதாசரால், ‘நகரங்களில் சிறந்தது காஞ்சி’ என்று புகழப்பட்ட காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில், இந்தப் பழமை வாய்ந்த ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தூங்கானை மாடக்கோயில் வடிவம் ‘கஜப்பிரஷ்டம்’ (யானையின் பின்பகுதி போன்ற அமைப்பு), கருவறையின் நான்கு புறங்களிலும் காற்று வருவதற்கான ஜன்னல் அமைப்பு, அழகு பொருந்திய கும்ப பஞ்சரங்கள் ஆகியவை இக்கோயிலின் சிறப்பம்சங்கள்.

அர்த்த மண்டபம், முகமண்டபம் ஆகிய மண்டபங்களுடன் விளங்கும் இருதள கற்றளிக்கோயில் இது. அர்த்த மண்டபத்தினுள் இருபுறமும் சங்கநிதி, பத்மநிதி அலங்கரிக்கின்றனர். கருவறை வெளிப்புற தேவகோஷ்டங்கள் சிற்பங்கள் ஏதுமின்றி காணப்படுகின்றது.ஜுரம் காய்ச்சலால் ஏற்படும் உடலின் வெப்பத்தைக்குறைத்து குணம் பெறச் செய்பவர் என்பதால், இத்தல இறைவன் `ஜுரஹரேஸ்வரர்’ என்ற பெயர் கொண்டு லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார்.

பிற்காலத்தில் அமைக்கப்பட்ட கோபுரத்தில் சிவபெருமானின் திருக்கோலங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன. அவற்றில் ‘சதாசிவ மூர்த்தி’ வடிவம் குறிப்பிடத்தகுந்தது. தொல்லியல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவிலுக்கு குறைவான எண்ணிக்கையிலான பக்தர்களே வருகை புரிகின்றனர்.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

The post ஜுரம் போக்கும் ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் appeared first on Dinakaran.

Tags : Jurahareswarar temple ,Kumkum Spiritual Sculpture and Excellence Temple ,Kanchipuram ,Pallavar ,Juram Pokum Juraheswarar Temple ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...