×

பாஜக வேட்பாளர் பட்டியலுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை: முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி

பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பாஜக மூத்த தலைவர்கள் பலருக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் துணை முதலமைச்சர் லக்ஷ்மன் சவதி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் போட்டியிடும் 189 அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. சர்சையில் சிக்கியவர்கள், கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் உள்ளிட்டோருக்கு பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. அந்த வகையில் மீன் வளத்துறை அமைச்சர் மற்றும் 10 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

பல தொகுதிகளில் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு இருப்பதாக கூறி கட்சி தலைமைக்கு எதிராக பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஹுப்ளி தர்வாட் மத்திய தொகுதியில் வெற்றி பெற்று 6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் திடீரென தன்னை தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்குமாறு பாஜக தலைமை கூறுவதாக போர் கோடி தூக்கியுள்ளார். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறாத நிலையில் எவ்வளவு விலை கொடுத்தாவது தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.

இதனிடையே பெங்களூருவில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை பாஜக வேட்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை; முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியலுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி வருவதாக தெரிவித்தார். அதன் பாஜக மாநில துணைத் தலைவர் லக்ஷ்மன் சவதியிடம் பேசி வருவதாகவும், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என கேட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்த பாஜகவை கண்டித்து சட்ட மேலவை மற்றும் பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முன்னாள் துணை முதலமைச்சர் லக்ஷ்மன் சவதி அறிவித்துள்ளார்.

The post பாஜக வேட்பாளர் பட்டியலுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை: முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Chief Minister ,Basavaraj Pomi ,Bengaluru ,Karnataka assembly elections ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்