×

பட்டுப்புழு வளர்ப்பில் பலே லாபம்!

2 லட்சத்து 10 ஆயிரம் புழுக்களை வளர்த்து முதல்வரிடம் பரிசுபெற்றவர்

விவசாயத்தில் பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை பண்ணை உருவாக்கம், பண்ணை மீன் வளர்ப்பு, பண்ணைத் தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாயிகளின் உபதொழிலாக இருப்பது பட்டுப்புழு வளர்ப்புதான். அந்த வகையில் பட்டுப்புழு வளர்பில் சாதனைபுரிந்து மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு விருதுகளை வாங்கிய தேனி மாவட்டம் போடி, பாலார்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னன் அவர்களிடம் பேசினோம்.


நாங்கள் பாரம்பரியமாகவே விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தோட்டத்தில் வாழை, பச்சை மிளகாய், தக்காளி, கொத்த மல்லி என சாகுபடி செய்துவருகிறோம். கடந்த 7 ஆண்டுகளாக 2 ஏக்கர் நிலத்தில் விவசாயப் பயிர்களில் குறுகிய காலத்தில் நிறைவான லாபத்தைத் தரக்கூடிய பயிர்களுள் ஒன்றான மல்பெரி, பட்டுப்புழு வளர்ப்பிலும் ஈடுபட்டுவருகிறோம். விவசாயத்தில் முன் அனுபவம் இருந்தாலும் மல்பெரி, பட்டுப்புழு வளர்க்க வேண்டும் என்றால் முதல்கட்டமாகப் பட்டுவளர்ப்புச் சேவை மையத்திலோ அல்லது அரசுக்குச் சொந்தமான பட்டு வளர்ச்சி பயிற்சி நிலையத்திலோ இத்தொழில் தொடர்பான அடிப்படையான அம்சங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். ஓசூரில் உள்ள தமிழ்நாடு பட்டு வளர்ச்சி பயிற்சி நிலையத்தில் இதற்கான பயிற்சியில் நான் கலந்துகொண்டேன். இப்பயிற்சியில், மல்பெரி சாகுபடி செய்யும் முறை, பட்டுக்கூடு வளர்ப்புமுறை குறித்த அனைத்துத் தகவல்களும் அடங்கிய கையேடு ஒன்றும் வழங்கினர். இந்த பயிற்சியில் கிடைத்த அனுபவம், இந்த வகை விவசாயத்திற்கும் அரசு மானியம் கொடுப்பது அறிந்தபிறகு அரசின்
உதவியோடும் முழுவதுமாக மல்பெரி, பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டேன்.

துவக்கத்தில் பழனி தொப்பம்பட்டியில் உள்ள வேலவன் சொக்கி என்பவரிடம் ஒரு வாரம் வளர்க்கப்பட்ட 250 பட்டுப்புழுக்களை ரூ.7 ஆயிரம் விலைக்கு வாங்கி, ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கிற ரேக்குகளில் வைத்து அதற்குத் தேவையான உணவாகக் கொள்ளும், மல்பெரி இலைகளையும் இட்டு, தொடர்ந்து 22 நாட்கள் வரை அந்த புழுக்களை வளர்த்தேன். நீண்ட அறைகள் கட்டி, பட்டுப் புழுவை வளர்த்தெடுக்க ரேக்குகள் அமைத்து, எறும்புகூட உள்ளே நுழையாத அளவிற்கு கொசு வலைகளைக் கட்டி தயார்செய்து, பட்டு உற்பத்தியை துவங்கினேன். பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் முழுவதிலும் மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான இலைகள்தான்
வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. வி-1 மற்றும் எஸ்-36 ஆகிய இரு ரகங்களும் அதிக மகசூலைக் கொடுக்கக்கூடிய பட்டு வளர்ப்பிற்கு ஏற்ற ரகங்கள் ஆகும். பட்டுப்புழுக்கள் நன்கு வளர, இந்த இரு ரகங்களும் நல்ல சத்தான இலைகளை கொடுக்கின்றன. அந்த வகையில் நாங்கள் வி1 ரக மல்பெரியை நடவு செய்தோம். இரண்டு ஏக்கரில் மல்பெரி செடி வளர்த்தால் 50 அடி நீளம், 20 அடி அகலத்தில் குடில் அமைப்பது சரியாக இருக்கும். குடில் ஒன்றுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் புழுக்களை வளர்த்துவருகிறோம். ஒரு பேட்ச்சுக்கு ஒரு ஏக்கர் என குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் தேவைப்படும். இதன்படி ஒரு பேட்ச்சு பட்டுக்கூடுகள் கிடைத்ததும். அடுத்த பேட்ச்சுக்கான மல்பெரி செடிகள் தயார் நிலையில் வளரும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த முறையில் நாங்கள் ஆண்டுக்கு 11 மாதங்கள் வரை பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்து வருகிறோம். பட்டுக்கூடு 2 கிராம் எடைக்கு அதிகமாக இருந்தால் அதிக லாபம் கிடைக்கும்.

இளம் புழுக்களை பொருத்தவரையில் மல்பெரி இலைகளை முதல் 14 நாட்கள் வேகமாக உண்ணும். பிறகு இரண்டரை நாட்கள் தோலுரிக்கும். அப்போது, மல்பெரியை உண்ணாது. இதிலிருந்து 18 வது நாளில் தொடர்ந்து ஒன்றரை நாள் வரையில் பட்டுப்புழு வாயால் பட்டுக்கூடு கட்டத் தொடங்கும். அதேபோல் முட்டைப் பொரிப்பிலிருந்து நன்கு முதிர்ந்து கூடுகட்டும் வரை பட்டுப்புழு ஒவ்வொரு பருவங்களாக பிரிக்கப்படுகிறது. புழு வளர்ப்பில் ஏற்படும் திடீர் தட்பவெப்ப மாற்றங்கள், நோய்களை உண்டாக்கும் என்பதால், அவற்றை சிறந்தமுறையில் கவனிக்க வேண்டும். நல்ல தரமான புழுவளர்ப்பிற்கு ஒரே சீரான வெப்பம் தேவை என்பதால், தனிப் புழு வளர்ப்புமனை அமைத்து பராமரிக்கிறோம். இளம்புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.

இதில் வளர்ந்த புழு வளர்ப்பு மூன்றாம் பருவத்திலிருந்து தொடங்குகிறது. பட்டுப்புழுக்கள் மிகவேகமாகவும், அதிகமாகவும் இலைகளை உண்ணுபவையாக இருக்கும். பட்டுப்புழு உற்பத்தியில் வளர்ப்பு மனை மிகவும் முக்கியம். சுத்தம் செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கும் ஏற்றவாறு வளர்ப்புமனையைக் அமைக்க வேண்டும். மல்பெரி பட்டுப்புழு வளர்ப்பினை தனியே பேணி வளர்க்கும்போது அதற்கு குறிப்பிட்ட சுற்றுச்சூழல் உள்ளதா என்று கவனிப்பதோடு, 70-80% ஈரப்பதம் உள்ளதா என்பதை ஒவ்வொரு நாளும் கணக்கிடுவோம். நல்ல குளிர்ச்சியான காற்றோட்டமான வளர்ப்பு மனையை அமைப்பது இலைகளை சேமிப்பதற்கும், இளம்புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும், தோலுரிப்பிற்கும் வேண்டிய இடவசதிகளுடன் அமைக்க வேண்டும். தோலுரிப்பு நேரங்களில் வளர்ப்பு மனை காற்றோட்டமாகவும் ஈரப்பதமின்றியும் இருக்க வேண்டும். புழுக்கள் தோலுரிப்பிற்கு தயாரானவுடன், படுக்கை காய்ந்து இருக்க நீர்த்த சுண்ணாம்புத் தூள் தூவுவோம். திடீர் வெப்பம், ஈரப்பத மாற்றத்தையும், அதிக சூரிய ஒளியையும் நாங்கள் தவிர்ப்பதன் மூலம் பட்டுக்கூடு அதிகமாக கிடைக்கிறது. 95 சதவீத புழுக்கள்

தோலுரித்த பின்பு உணவு கொடுப்போம். கட்டப்பட்ட கூடுகள் 6 வது நாளில் அறுவடைக்கும் தயாராகிவிடும். இந்த நேரத்தில் நலிந்த கூடுகளை அகற்றி விட்டு, பின்னர், கூடுகளின் தரத்தைப் பொறுத்து பிரிக்க வேண்டும். அறுவடை செய்த கூடுகளை மாலை, இரவு நேரங்களில் 7 ஆம் நாளில் அனுப்பவேண்டும். 30-40 கிலோ தாங்கக் கூடிய நைலான் வலைப்பைகளில் காற்றோட்டமாக நிரப்பி, அறைவசதி உள்ள வாகனங்களில் எடுத்துச்சென்று தேனி, கோவை, சேலத்தைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறோம். வருமானம் என்று பார்க்கும் போது பராமரிப்பு செலவு வேலையாட்கள் செலவு என்று மாதத்திற்கு 70 ஆயிரம் போக 1.80 லட்சம் லாபம் கிடைக்கிறது.
இந்த முறையில் நடவு, பராமரிப்பு செய்ததன் மூலம் 100 நோயற்ற முட்டைகளில் இருந்து சராசரியாக 60 லிருந்து 70 கிலோ கூடுகள் எடுத்துள்ளோம். ஒரு வருடத்தில், 2 ஏக்கர் மல்பெரி தோட்டத்தைக் கொண்டு 1800 கிலோ கூடுகளைப் உற்பத்தி செய்துள்ளோம். இதன் மூலம் மாநில அளவில் சிறந்த மல்பெரி மற்றும் பட்டுப்புழு உற்பத்தி விவசாயிக்கான பரிசினை கடந்த முறை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்களிடமிருந்து பெற்றேன்.”

பட்டுப்புழு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

வளர்ப்புமனைக்குள் செல்வதற்கு முன்பு, கை, கால்களைக் கிருமி நாசினி கரைசலில் கழுவ வேண்டும். முதலில் சோப்பு போட்டு கழுவிய பின்பு கிருமி நாசினிக் கரைசலில் கழுவ வேண்டும் (2.5 சதவீதம் சேனிடெக் / செரிக்ளோர் உள்ள 0.5 சதவீதம் சுண்ணாம்பு கரைசல் அல்லது 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீத சுண்ணாம்புக் கரைசல்). நோய்வாய்ப்பட்ட புழுக்களை நீக்கிய பின்பும், படுக்கையைச் சுத்தம் செய்த பின்பும், உணவளிக்கச் செல்லும் முன்பும் கிருமிநாசினி கரைசல் கொண்டு கையைக் கழுவ வேண்டும். நோய் தாக்கப்பட்ட புழுக்களைத் தினமும் அகற்றி சுண்ணாம்புத்தூள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ள தொட்டியில் போட வேண்டும். பின்பு அதனை எரிக்கவோ அல்லது தூரமான இடத்தில் குழி தோண்டிப் புதைக்கவோ வேண்டும்.

தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் 41,624 ஏக்கரில் மல்பெரி இலை சாகுபடி, பட்டுப்புழு வளர்ப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் 1.5 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மாநில அளவில் 2012-2013 ஆம் ஆண்டில் 1184.62 மெட்ரிக் டன் மூலப்பட்டு, 609.12 மெட்ரிக் டன் கலப்பின பட்டு, 575.50 மெட்ரிக் டன் இருசந்ததி பட்டு உற்பத்தி செய்யப்பட்டது. நாட்டின் இருசந்ததி பட்டுப்புழு வளர்ப்புத் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. நோயற்ற தரமான சராசரி பட்டுக் கூடு உற்பத்தி தேசிய அளவில் 58.20 கிலோ, தமிழ்நாட்டின் பட்டுக்கூடு உற்பத்தி 69.69 கிலோ அளவாக முதலிடத்தில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இளம்புழுக்கள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இளம் புழுக்கள் உற்பத்தி 27% ஆக உள்ளது. இது தேசிய அளவில் மிகவும் அதிக அளவாகும்.

The post பட்டுப்புழு வளர்ப்பில் பலே லாபம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...