×

தேனி அருகே காமராஜர்புரத்தில் உள்ள சிப்பிலிச்சியம்மன் கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

*விவசாயிகள்,பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

தேனி : தேனி அருகே காமராஜர்புரத்தில் உள்ள சிப்பிலிச்சியம்மன் கண்மாய் தனியார் சிலரால் ஆக்கிரமிப்புக்குள்ளானது. அதன்பின், உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பினை அகற்ற உத்தரவிட்ட நிலையில், தற்போது வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெறவில்லை. எனவே, கண்மாய் ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி அருகே காமாட்சிபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் காமாட்சிபுரம், மாணிக்காபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள போடி பகுதியில் இருந்து கொட்டக்குடி ஆற்றில் இருந்து துரைராஜபுரம் பகுதியில் இருந்து பிரிந்து வரும் கால்வாய் மூலமாக வரும் கொட்டக்குடி ஆற்றின் நீரினை ஆதாரமாக கொண்டு காமராஜபுரம் கிராமம் அருகே சிப்பிலிச்சியம்மன் கண்மாய் அமைந்துள்ளது.

சுமார் 120.50 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இக்கண்மாய் பாசனத்தை நம்பி சுமார் 250 விவசாயிகள் கரும்பு, நெல், வாழை, தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். இதுதவிர வெங்காயம், தக்காளி, வெண்டை, பீட்ரூட், சோளம், சூர்யகாந்தி விவசாயம் செய்து வருகின்றனர். இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலமாக இதன்சுற்றுவட்டார விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளுக்கு ஊற்று கிடைத்து வருகிறது. இதன்காரணமாக கிணற்று பாசனமும் கண்மாய் நீரினை ஆதாரமாக கொண்டு நடந்து வருகிறது.

இந்நிலையில், இக்கண்மாயை தனிநபர்கள் 10க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்துள்ளனர். கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் விவசாய தோட்டங்களை அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
மேலும், கண்மாய்க்குள்ளேயே ஆக்கிரமிப்பு தோட்டங்களுக்கு செல்ல சாலையையும் அமைத்துள்ளனர்.இதன்காரணமாக கண்மாயில் இயற்கையாக தேங்கும் நீரின் அளவு குறைந்து விட்டது.
ஆக்கிரமிப்பு நிலத்தில் தேங்கும் தண்ணீரைக் கொண்டு சுமார் 50ஏக்கருக்கும் மேலான பரப்பளவுள்ள நிலம் பாசன வசதி பெறுவது பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சிப்பிலிச்சியம்மன் கண்மாய் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி காமராஜபுரம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சித் தலைவரும், விவசாயிமான நடராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2022ம் ஆண்டு ரிட் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவினை விசாரணை செய்த மகாதேவன் மற்றும் சத்யநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு வருகிற 8 வார காலத்திற்குள் சிப்பலிச்சியம்மன் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என கடந்த 2022ம் ஆண்டு நவ.17ம் தேதி தேனி மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை, வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டனர்.

8 வாரம் என்பது 2023ம் ஆண்டு ஜனவரியுடன் முடிவடைந்த நிலையில் இதுவரை பொதுப்பணித்துறை நிர்வாகம் ஆக்கிரமிப்பினை எடுக்கவில்லை. இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம், போடி தாசில்தார் அலுவலகம், மஞ்சளாறு வடநில கோட்ட நீர்ளவளத் துறை அலுவலகத்திற்கு சென்று முறையிட்டும் பலனில்லை என முன்னாள் ஊராட்சித்தலைவர் நடராஜன் கூறுகின்றார்.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சித்தலைவர் நடராஜன் கூறியதாவது: சிப்பிலிச்சியம்மன் கண்மாய் 13 நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் சுயநலத்திற்காக கண்மாய் பகுதியில் செய்துள்ள ஆக்கிரமிப்பு தோட்டங்களுக்கு வாகனங்களில் சென்று வர வசதியாக தார்ச்சாலையும் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தேன்.
இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அளித்த தீர்ப்பில் 8 வாரங்களுக்குள் கண்மாய் ஆக்கிரமிப்பினை அகற்றஉத்தரவிட்டது. ஆனால் இதுவரை அதிகாரிகள் ஆக்கிரமிப்பினை அகற்றாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.இதுகுறித்து மஞ்சளாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ரமேஷ், காமராஜபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜனுக்கு அனுப்பிய கடிதத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கண்மாயில் ஆக்கிரமிப்பு எடுத்துள்ளோம். இருந்தபோதும் இன்னமும் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறியுள்ளதால் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, போடி வருவாய்த் துறையினர் நிலத்தை அளவீடு செய்து கொடுத்தால் உடனடியாக ஆக்கிரமிப்பினை அகற்ற பொதுப்பணித் துறை தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

பொதுப்பணித்துறை நிர்வாகம், நிலத்தை வருவாய்த்துறை அளந்து கொடுத்தால் ஆக்கிரமிப்பினை அகற்ற தயார் என கூறிவிட்டனர். இந்நிலையில் போடி தாலுகாவில் இருந்து வருவாய்த்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை ஏற்று நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என சிப்பிலிச்சியம்மன் கண்மாய் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

The post தேனி அருகே காமராஜர்புரத்தில் உள்ள சிப்பிலிச்சியம்மன் கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Sippilichiyamman ,Kanmai ,Kamarajarpuram ,Theni ,Sippilichiyamman Kanmai ,
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாயில்...