×

பூங்கா ஊழியர்கள் 20-வது நாளாக போராட்டம் மலர் கண்காட்சி பாதிக்கும் அபாயம்

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா உட்பட நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகை பிடித்தம் செய்திட வேண்டும்.

பணி மூப்பு அடிப்படையில் பத்தாண்டு பணிக்காலம் முடிந்தவர்களுக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த மாதம் 23ம் தேதி முதல் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நாள் தோறும் உண்ணாவிரத போராட்டம், கஞ்சி காய்ச்சும் போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், தமிழக அரசு இவர்களுக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் உள்ளது.

இந்நிலையில், 20வது நாளான நேற்று தொழிலாளர்கள் வழக்கம் போல், உண்ணாவிரம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை அழைத்து, ‘நீங்கள் இங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, அதிகாரிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே, நீங்கள் போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

ேமலும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது’ எனவும் எச்சரித்தனர். தொழிலாளர்கள் ஒலி பெருக்கியை பயன்படுத்தவில்லை. வழக்கம் போல் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் போராட்டத்தை நிறுத்த தற்போது சில தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே, தொழிலாளர்கள் போராட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு என புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், தொழிலாளர்கள் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படுத்தாமல் பெர்ன் புல்மைதானத்தில் அமைதியாகவே போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

சில அதிகாரிகளின் நடவடிக்கையால் தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடைய வாய்ப்புள்ளது. கடந்த 20 நாட்களாக பூங்கா தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சில பூங்காவில் ஏற்கனவே நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் பராமரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மலர் செடிகள் நடவு செய்யப்படாமல் உள்ளது.

தொழிலாளர்களின் போராட்டம் நீடித்தால் மலர் செடிகள் பராமரிப்பு பணிகள் பாதிக்கும். இந்த பாதிப்பு மலர் கண்காட்சியின் போது எதிரொலிக்கும். எனவே, தோட்டக்கலைத்துறையினர் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசிடம் பேச்சு வார்த்தை நடத்துவது அவசியம். இல்லையேல் மலர் கண்காட்சி கட்டாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊட்டி பூங்கா, பண்ணை ஊழியர்கள் போராட்டம் திடீர் நிறுத்தம்

ஊட்டி பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 20வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று சென்னையில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சங்க பிரதிநிதிகளுடன் போனில் பேசினார். போராட்டத்தை வாபஸ் பெற்றால் துறை சார்ந்த அமைச்சரான எம்ஆர்கே பன்னீர்செல்வத்திடம் அழைத்துச்சென்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து சங்க பிரதிநிதிகள் கூறும்போது, ’சென்னையில் அமைச்சர் ராமச்சந்திரன், வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து சமூக முடிவு எடுப்பதாக உறுதியளித்தார். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என்று நம்புகிறோம். துரதிஷ்டவசமாக சமூக முடிவு எட்டப்டவில்லை என்றால் போராட்டம் தொடரும்’ என்றனர்.

The post பூங்கா ஊழியர்கள் 20-வது நாளாக போராட்டம் மலர் கண்காட்சி பாதிக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Feedi ,Nilgiri district ,Oodi Botanical Park ,
× RELATED இறந்தவர்கள் பெயர்களை வாக்காளர்...